பக்கம் - 251 -
நபி (ஸல்) அவர்களுடைய மருமகன் அபுல் ஆஸும் கைதிகளில் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மகளார் ஜைனப் (ரழி) தனது தாய் கதீஜா (ரழி) தனக்களித்த மாலையை ஈட்டுத் தொகையாக அனுப்பினார்கள். ஜைனப் (ரழி) அவர்களின் மாலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்களது உள்ளம் இரங்கியது. தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலையிட அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர “மகள் ஜைனப் (ரழி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். அவர் மக்கா சென்ற பிறகு ஜைனப் (ரழி) அவர்களை மதீனா அனுப்பினார். ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வர ஜைது இப்னு ஹாரிஸாவையும் மற்றும் ஒரு அன்சாரி தோழரையும் நபி (ஸல்) அனுப்பினார்கள். அவர்களிடம் நீங்கள் “பத்தன் யஃஜஜ் என்ற இடத்தில் தங்கியிருங்கள். ஜைனப் அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கிருந்து அவரை அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். அந்த இருவரும் அவ்வாறே சென்று ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வந்தார்கள். ஜைனப் (ரழி) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற வரலாறு மிக துயரமான நிகழ்ச்சியாகும். இப்பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் கேட்போரின் உள்ளங்களை உருக்கிவிடும்.

கைதிகளில் சுஹைல் இப்னு அம்ர் என்பவரும் இருந்தார். இவர் இலக்கிய நயத்துடன் பேசும் புகழ் பெற்ற பேச்சாளர். சில சமயங்களில் இஸ்லாமிற்கெதிராக பிரச்சாரம் செய்வார். எனவே, “அல்லாஹ்வின் தூதரே! இவனது இரண்டு முன்பற்களைக் கழற்றி விடுங்கள். இவன் அதிகம் பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எதிராக இவன் எந்தப் பிரசங்கமும் செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். உறுப்புகளைச் சிதைப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூடாது என்பதற்காகவும், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை பயந்தும் நபி (ஸல்) உமரின் இக்கோரிக்கையை நிராகரித்தார்கள்.

இப்போருக்குப் பின், உம்ரா செய்வதற்காகச் சென்ற ஸஅது இப்னு நுஃமான் (ரழி) அவர்களை அபூ ஸுஃப்யான் மக்காவில் சிறைபிடித்துக் கொண்டார். அபூ ஸுஃப்யானின் மகன் அம்ர் இப்னு அபூஸுஃப்யான் பத்ர் போரில் கைது செய்யப்பட்டு முஸ்லிம்கள் வசம் இருந்தார். ஸஅதை விடுவிப்பதற்காக அம்ரை அபூ ஸுஃப்யானிடம் சில முஸ்லிம்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அபூஸுஃப்யானும் தனது மகன் அம்ர் கிடைத்தவுடன் ஸஅதை விடுதலை செய்தார்.

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போரை விவரித்து குர்ஆனில் ‘அல் அன்ஃபால்’ என்ற அத்தியாயம் இறக்கப்பட்டது. நாம் கூறுவது சரியானால் “இந்த அத்தியாயம் இப்போரைப் பற்றிய இறைவிமர்சனம்” என்று கூறலாம். வெற்றி பெற்ற பிறகு அரசர்களும் தளபதிகளும் போரைப் பற்றி கூறும் விமர்சனங்களிலிருந்து இந்த இறைவிமர்சனம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

முதலாவதாக, முஸ்லிம்களுக்கு அவர்களிடம் இருந்த சில ஒழுக்கக் குறைவுகளை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களை உயர் பண்புகளால் முழுமைபெற செய்ய வேண்டும் குறைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதே!