பக்கம் - 253 -
பத்ர் போரில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் கொண்டாடிய நோன்புப் பெருநாளே முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெருநாட்களில் முந்தியதும் மிகச் சிறந்ததுமாகும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி எனும் கிரீடத்தை அணிவித்த பின்பு, அவர்களுக்கு அவன் வழங்கிய இந்தப் பெருநாள் எவ்வளவு அதிசயத்தக்கது! தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்), லாயிலாஹஇல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)” என்று சப்தமிட்டுக் கூறியவர்களாக வந்து, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத அந்த தொழுகையின் காட்சிதான் எவ்வளவு அற்புதமானது! அல்லாஹ்வின் உதவியையும் அளவிலா அருளையும் பெற்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டன. அவனது நேசத்தையும் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள துடியாய்த் துடித்தன.

இதைத்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தில் நினைவூட்டுகிறான்:

நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26)