பக்கம் - 255 -
அவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்தது.

ஒளி பொருந்திய ஒரு நாள் வந்தே தீரும்!
அதன் பிறகு ஒப்பாரியிடும் பெண்களின்
அழுகையை நான் நீண்ட நாட்கள் கேட்பேன்!

ஆம்! அப்படித்தான். மக்காவாசிகள் மதீனாவின் மீது மிக மூர்க்கமான போர் ஒன்றை தொடுத்தனர். இதை வரலாற்றில் “உஹுத் போர்” என்று அழைக்கப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால் அவர்கள்மீது மக்களுக்கு இருந்த பயம் குறைந்தது.

இந்த ஆபத்துகளைப் முறியடிப்பதில் முஸ்லிம்கள் மிக முக்கிய பங்காற்றினார்கள். நபி (ஸல்) இந்த ஆபத்துகளைப் பற்றி எந்தளவு விழிப்புணர்வுடன் இருந்தார்கள் என்பதையும், அவற்றை முறியடிப்பதற்கு எந்தளவு முறையான திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதையும், அது விஷயத்தில் அவர்களின் வழி நடத்தும் மகத்தான திறமை எவ்வாறு இருந்தது என்பதையும் அவர்கள் மேற்கொண்ட செயல்திட்டங்கள் மூலமாக நன்றாகத் தெரிய வருகிறது.

பின்வரும் வரிகளில் அந்த செயல்திட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

ஸுலைம் குலத்தவருடன் போர்

பத்ர் போருக்குப்பின் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்த முதல் செய்தி “ஸுலைம் மற்றும் கத்ஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்க தங்களது படைகளைத் திரட்டுகின்றனர்” என்பதாகும். உடனே நபி (ஸல்) 200 வீரர்களுடன் அவர்களது பகுதிக்குள் திடீரெனப் புகுந்து ‘குதுர்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், ஸுலைம் கிளையினர் தப்பிவிட்டனர். 500 ஒட்டகங்கள் அவர்கள் ஊரில் இருந்தன. அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதிலிருந்து ஐந்தில் ஒன்றை ஒதுக்கிவிட்டு எஞ்சிய 400 ஒட்டகங்களை, ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு ஒட்டகங்கள் வீதம் நபி (ஸல்) வழங்கினார்கள். மேலும் ‘யஸார்’ என்ற ஓர் அடிமையும் கிடைத்தார். அவரை உரிமையிட்டார்கள். அவர்களது ஊரில் மூன்று நாட்கள் தங்கிய பின்னர் நபி (ஸல்) மதீனா திரும்பினார்கள்.

பத்லிருந்து திரும்பி, ஏழு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் இந்தப் போர் ஏற்பட்டது. ஆனால், சிலர் முஹர்ரம் மாதத்தின் நடுவில் ஏற்பட்டதென்று கூறுகின்றனர். இப்போருக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஸிபாஉ இப்னு உர்ஃபுதா என்ற தோழரை தனது பிரதிநிதியாக ஆக்கினார்கள். சிலர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமைப் பிரதிநிதியாக ஆக்கினார்கள் என்றும் கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நபியவர்களைக் கொல்ல திட்டம்

பத்ர் போரில் தோற்றதால் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மக்காவாசிகள் கோபத்தால் கொதித்தனர். தங்களின் வீழ்ச்சிக்கும் இழிவுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் அந்த முஹம்மதைக் கொன்று விடுவதுதான் அனைத்திற்கும் சரியான தீர்வு என முடிவு செய்தனர். இதற்காக மக்கா நகர வீரர்களில் இருவர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர்.