பக்கம் - 260 -
இதுபற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவதை கேட்போம்: நபி (ஸல்) பத்ர் போரில் குறைஷிகளைத் தோற்கடித்து மதீனா திரும்பிய பிறகு, கைனுகாவினன் கடைவீதியில் அங்குள்ள யூதர்களை ஒன்று சேர்த்தார்கள். அவர்களிடம் “யூதர்களே! குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படுவதற்கு முன் நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு அவர்கள், “முஹம்மதே! போர் செய்யத் தெரியாத அனுபவமற்ற குறைஷிகளில் சிலரை போரில் கொன்று விட்டதால் நீர் மயங்கிவிட வேண்டாம்! நீர் எங்களிடம் போர் தொடுத்தால் நாங்கள் வலிமைமிக்க மனிதர்கள் என்பதையும், எங்களைப் போன்றவர்களை நீர் இதுவரை சந்தித்ததில்லை என்பதையும் அறிந்து கொள்வீர்!!” என்று பதிலளித்தனர். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான். அதை நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம். (பத்ர் போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் நிச்சயமாக உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களைத் தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.”(அல்குர்ஆன் 3:12 , 13) (ஸுனன் அபூதாவூது)

கைனுகாவினன் இந்த பதில் பகிரங்கமாகப் போருக்கு விடுத்த அழைப்பாகவே இருந்தது. இருப்பினும் நபி (ஸல்) தங்களது கோபத்தை அடக்கினார்கள். முஸ்லிம்களும் சகிப்புடன் நடந்தார்கள். இறுதி நிலை எப்படி முடிகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கைனுகாவினன் துணிவு அதிகரித்தது. அவர்கள் பல வழிகளில் மதீனாவில் குழப்பம் விளைவித்து, தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடினர்.

இதுபற்றி இப்னு ஹிஷாம் (ரஹ்) அறிவிக்கிறார்: ஒரு அரபிப் பெண் தனக்கு சொந்தமான, ஒட்டகத்தின் மேல் விக்கப்படும் தோல் ஒன்றை விற்பதற்காக கைனுகாவினன் கடைத் தெருவிற்கு வந்தார். விற்ற பிறகு அதன் கிரயத்தை எதிர்பார்த்து அங்கிருந்த பொற் கொல்லன் ஒருவன் கடைக்கருகில் அமர்ந்தான். அங்கிருந்த யூதர்கள் அப்பெண் தனது முகத்திலிருந்து பர்தாவை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், அதை அவள் மறுத்துவிட்டாள். அந்த பொற் கொல்லன் அப்பெண்ணின் ஆடையை அவரது முதுகுப்புறத்தில் அவருக்குத் தெரியாமல் கட்டினான்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அவர் அங்கிருந்து எழுந்தபோது அவரது ஆடை அகன்று அவரது மறைவிடம் தெரியவே குழுமியிருந்த யூதர்கள் சப்தமிட்டுச் சிரித்தனர். இதனால் அவர் வெட்கித் தலைக் குனிந்து கூச்சலிட்டார். இதை அறிந்த முஸ்லிம்களில் ஒருவர் பொற் கொல்லன் மீது பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டார். பொற் கொல்லன் யூதனாக இருந்ததால் யூதர்கள் அனைவரும் இந்த முஸ்லிமின் மீது பாய்ந்து அவரைக் கொன்று விட்டார்கள். அப்போது அந்த முஸ்லிமின் உறவினர்கள் மற்ற முஸ்லிம்களிடம் யூதர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றனர். இதிலிருந்தே முஸ்லிம்களுக்கும் கைனுகாவினருக்குமிடையில் சண்டை மூண்டது. (இப்னு ஹிஷாம்)