பக்கம் - 263 -
தீ அம்ர் போர்

இது ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது. உஹுத் போருக்கு முன் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களில் இதுவே பெரியதாகும்.

இப்போருக்கான காரணம் என்னவெனில், ஸஅலபா, முஹாப் ஆகிய கிளையினர் மதீனாவின் சுற்றுப்புறங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் போடுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபி (ஸல்) முஸ்லிம்களைத் தயார்படுத்தி 450 வீரர்களுடன் புறப்பட்டார்கள். புறப்படும் முன் மதீனாவில் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

வழியில் ஸஅலபா கிளையைச் சேர்ந்த ‘ஜுபார்’ என்பவர் முஸ்லிம்கள் வசம் சிக்கினார். அவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வர, நபி (ஸல்) அவருக்கு இஸ்லாமை அறிமுகப் படுத்தினார்கள். அவரும் இஸ்லாமைத் தழுவினார். அவர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காக நபி (ஸல்) தனது தோழர் பிலாலுடன் அவரை இணைத்து விட்டார்கள். அவர் எதிரிகளின் பகுதியைக் காண்பித்துக் கொடுக்க வழிகாட்டியாக முஸ்லிம்களுடன் வந்தார்.

மதீனாவின் படை வருவதைக் கேள்விப்பட்ட எதிரிகள் மலைகளின் உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள். அதுதான் ‘தீ அம்ர்’ என்று சொல்லப்படும் தண்ணீர் நிறைந்த இடம். அவ்விடத்தில் ஏறக்குறைய ஸஃபர் மாதம் முழுமையாகத் தங்கியிருந்தார்கள். கிராம அரபிகளுக்கு முஸ்லிம்களின் ஆற்றலை உணரச் செய்து, அவர்களது உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய அச்சமேற்படச் செய்தார்கள். பின்பு அங்கிருந்து நபி (ஸல்) மதீனாவிற்குக் கிளம்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

 
கயவன் கஅபை கொல்லுதல்

‘கஅப் இப்னு அஷ்ரஃப்“- இவன் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் கடும் குரோதம் கொண்டவன். நபியவர்களுக்கு எப்போதும் நோவினை தருபவன். இவன் முஸ்லிம்களுடன் போர் தொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி வந்தான். இவன் யூதர்களில் நப்ஹான் பிரிவைச் சேர்ந்த ‘தை’ இனத்தைச் சேர்ந்தவன். இவனது தாய் யூதர்களில் நழீர் இனத்தைச் சேர்ந்தவள். இவன் பெரிய செல்வந்தனாக இருந்ததுடன் நல்ல அழகுடையவனாகவும் இருந்தான். இவன் அரபியில் நல்ல கவிபாடும் திறமையுடையவன். இவனது கோட்டை மதீனாவின் தென் கிழக்கில் நளீர் இன யூதர்களின் வீடுகளுக்குப் பின்னால் இருந்தது.

“முஸ்லிம்கள் பத்ரில் வெற்றி பெற்றனர், அங்குக் குறைஷிகளின் தலைவர்கள் கொல்லப் பட்டனர்” என்ற செய்தி இவனுக்குக் கிடைத்தபோது “என்ன இது உண்மையான செய்தியா? இவர்கள் அரபியர்களில் மிகச் சிறப்புமிக்கவர்கள் ஆயிற்றே மக்களின் அரசர்களாயிற்றே அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது இவர்களைக் கொன்றிருந்தால் பூமியின் மேல் வசிப்பதைவிட பூமிக்குக் கீழ் சென்று விடுவதே மேல்” என்று புலம்பினான்.

முஸ்லிம்கள் போரில் வெற்றி பெற்று விட்டனர் என்று அல்லாஹ்வின் எதிரியாகிய இவன் அறிந்தவுடன், நபியவர்களையும் முஸ்லிம்களையும் இகழவும், முஸ்லிம்களின் எதிரிகளைப் புகழவும் செய்தான். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டினான். இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மதீனாவிலிருந்து மக்கா சென்றான். அங்கு முத்தலிப் இப்னு அபூ வதாஆ என்பவனிடம் தங்கினான். பிறகு குறைஷிகளில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக இரங்கல் பாட்டுப் பாடி, அழுது பிரலாபித்து இணைவைப்பவர்களின் உணர்வுகளைத் தூண்டினான். நபியவர்களின் மீது குரோதத்தை மூட்டினான். மேலும், நபியவர்களிடம் போர் புரிய அவர்களைத் தூண்டினான். ஒருநாள் அபூ ஸுஃப்யானும் மற்றவர்களும் அவனிடம் “உமக்கு எங்களது மார்க்கம் விருப்பமானதா? அல்லது முஹம்மது மற்றும் அவன் தோழர்களின் மார்க்கம் விருப்பமானதா? எங்கள் இரு சாரால் யார் நேர்வழி பெற்றவர்கள்?” என்று கேட்டனர். “அதற்கவன் நீங்கள்தான் நேர்வழி பெற்றவர்கள். நீங்களே சிறந்தவர்கள்” என்று பதிலளித்தான். இது குறித்து பின்வரும் இறைவசனம் இறங்கியது: