பக்கம் - 270 -
இதுபோல் மக்களைப் போருக்கு ஆர்வமூட்ட முஸாஃபிஃ இப்னு அப்து மனாஃப் என்ற மற்றொரு கவிஞனையும் நியமித்தார்கள்.

அபூ ஸுஃப்யானால் சென்றமுறை (ஸவீக் போரில்) தனது மனதிலுள்ள பழிவாங்கும் ஆசையை சரிவர நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் பொருட்களில் பெரும்பாலானவற்றையும் அவர் இழந்தார். ஆகவே, முஸ்லிம்கள் மீது மிகுந்த எரிச்சலுடன் இருந்தார்.

ஜைது இப்னு ஹாரிஸாவுடைய தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டம் குறைஷிகளது பொருளா தாரத்தின் முதுகெலும்பை உடைத்து அளவிட முடியாத கவலையை அவர்களுக்கு அளித்தது. ஏற்கனவே பத்ரில் தங்கள் தலைவர்களை இழந்து துக்கக் கடலில் மூழ்கியிருந்த இவர்களுக்கு இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது. எனவே, முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் மத்தியில் தீர்வாக அமையும் ஒரு போரைச் சந்திப்பதற்காக குறைஷிகள் முழு வேகத்துடன் செயல்பட்டனர்.

குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்

ஓர் ஆண்டுக்குள் மக்காவாசிகள் தங்களது முழு தயாரிப்பையும் செய்து முடித்தனர். குறைஷிகள், அவர்களின் நட்புடைய ஏனைய குலத்தவர்கள் மற்றும் பல கோத்திரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என 3000 கூட்டுப் படையினர் போருக்காக கைகோர்த்தனர். பெண்களும் படை பட்டாளங்களுடன் இணைந்து வந்தால், போர் வீரர்கள் பெண்களின் மானமும் கண்ணியமும் பங்கப்பட்டுவிடாமல் இருப்பதற்காக, ரோஷத்துடன் உயிருக்குத் துணிந்து போரிடுவார்கள் எனக் கருதி படைத்தளபதி தங்களுடன் 15 பெண்களையும் சேர்த்துக் கொண்டார். இப்படையில் 3000 ஒட்டகங்கள், 200 குதிரைகள் மற்றும் 700 கவச ஆடைகள் இருந்தன. (ஜாதுல் மஆது)

இப்படையின் பொது தளபதியாக அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இருந்தார். குதிரைப் படை வீரர்களுக்கு காலித் இப்னு வலீதும், அவருக்குத் துணையாக இக்மா இப்னு அபூ ஜஹ்லும் பொருப்பேற்றனர். அப்துத் தார் கிளையினரிடம் போர் கொடி கொடுக்கப்பட்டது.

மக்காவின் படை புறப்படுகிறது

இவ்வாறு முழு தயாரிப்புடன் மக்கா படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டது. பழைய பகைமையும், உள்ளத்தில் இருந்த குரோதமும், இதுவரை கண்ட தோல்வியும் அவர்களது உள்ளங்களில் மேலும் கோப நெருப்பை மூட்டியவாறே இருந்தது. வெகு விரைவில் நடக்க இருக்கும் பெரும் சண்டையை நினைத்து ஆறுதல் அடைந்தவர்களாக பயணத்தைத் தொடர்ந்தனர்.

முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) குறைஷிகளின் செயல்களையும் அதன் ராணுவத் தயாரிப்புகளையும் கண்காணித்து வந்தார். மக்காவிலிருந்து படை புறப்பட்டுச் சென்றவுடன் அவசர அவசரமாகப் படையின் முழு விவரங்களை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.