பக்கம் - 275 -
முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை

ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே அங்கிருந்து தனது படையை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். ‘அஷ்ஷவ்த்’ என்ற இடத்தை அடைந்து அங்கு ஃபஜ்ர் தொழுகை நடத்தினார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் அளவு எதிரிகளுக்கு நெருக்கமாக இஸ்லாமியப் படை இருந்தது. அந்நேரத்தில் நயவஞ்சகனான இப்னு உபை படையில் மூன்றில் ஒரு பகுதியினரான 300 வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாமல் திரும்ப முரண்டு பிடித்தான். “நாங்கள் எதற்காக எங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வோம்? நபியவர்களோ தனது கருத்தை விட்டுவிட்டு மற்றவன் கருத்தை ஏற்று இங்கு வந்திருக்கிறார்” என்று காரணம் கூறி தனது வீரர்களுடன் படையிலிருந்து திரும்பினான்.

நபி (ஸல்) அவர்கள் தனது கருத்தை விட்டுவிட்டு பிறர் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பது இவன் விலகிச் சென்றதற்கான உண்மை காரணமல்ல. ஏனெனில், அவனது நோக்கம் இதுவாகவே இருந்திருந்தால் இந்த இடம் வரை நபியவர்களின் படையுடன் அவன் வந்திருக்க மாட்டான். இதையே காரணமாகக் கூறி முஸ்லிம்களுடன் புறப்படாமல் மதீனாவிலேயே தங்கியிருப்பான்.

மாறாக, இந்தச் சங்கடமான நேரத்தில் அவன் இவ்வாறு செய்ததற்கான முக்கிய நோக்கமாவது: எதிரிகள் பார்க்குமளவுக்கு அருகில் வந்துவிட்ட முஸ்லிம் படைகளுக்கு மத்தியில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த வேண்டும் அதனால் நபி (ஸல்) அவர்களை விட்டு மற்ற பல முஸ்லிம்களும் விலகிக் கொள்வார்கள் நபியவர்களுடன் மீதம் இருப்பவர்களின் வீரம் குறைந்து விடும் அப்போது எதிரிகள் இக்காட்சியைப் பார்த்து துணிவு கொண்டு நபியவர்களின் மீது தாக்குதல் தொடுத்து, வெகு விரைவில் நபியவர்களையும் அவர்களது உற்ற உண்மை தோழர்களையும் அழித்து விடுவார்கள் இதற்குப் பின்பு தலைமைத்துவம் அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் திரும்ப கிடைத்து விடும் என்பதே அந்த நயவஞ்சகனின் நோக்கமாக இருந்தது.

உண்மையில் அந்த நயவஞ்சகன் தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டான். இந்நிலையில் அவ்ஸ் குலத்தவல் ‘ஹாரிஸா’ என்ற குடும்பத்தினரும் கஸ்ரஜ் கூட்டத்தினல் ‘ஸலமா’ என்ற குடும்பத்தினரும் கோழைகளாகி போரிலிருந்து திரும்பிடலாம் என்று உறுதியாக எண்ணினர். ஆனால், அல்லாஹ் அவ்விரு குடும்பத்தினரையும் பாதுகாத்து அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை அகற்றி அவர்களின் உள்ளங்களில் துணிவையும் வீரத்தையும் ஏற்படுத்தினான். இதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (ம்உஹுத்’ போர்க் களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தை நினைத்துப் பாருங்கள்! (ஆனால், அல்லாஹ் அவர்களை அதிலிருந்து காத்துக் கொண்டான். ஏனெனில்இ) அல்லாஹ்வே அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 3:122)