பக்கம் - 276 -
போரைப் புறக்கணித்து, புறமுதுகிட்டு போகும் நயவஞ்சகர்களை அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரழி) பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் “இந்த இக்கட்டான சூழலில் உங்களின் கடமை என்ன? அதனை உணராமல் போகின்றீர்களே! வாருங்கள் போர்முனைக்கு! இறைவழியில் போரிடுங்கள்! அல்லது எதிரிகளிடமிருந்து எங்களைக் காக்கும் அரணாக நில்லுங்கள்” என்று எவ்வளவோ எடுத்துக் கூறி புரிய வைக்க முயன்றார். ஆனால், அவர்கள் “உண்மையில் நீங்கள் போருக்குத்தான் வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு உறுதியாக தெரிந்திருந்தால் நாங்கள் உங்களை விட்டு திரும்பியிருக்க மாட்டோம்” (அதாவது நீங்கள் போருக்கு வரவில்லை. மாறாக, தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வந்திருக்கிறீர்கள்) என்று கூறினர். இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரழி), “அல்லாஹ்வின் எதிரிகளே! அல்லாஹ் உங்களை அவனது கருணையிலிருந்து தூரமாக்கட்டும்! உங்களை விட்டும் அல்லாஹ் தனது நபியை முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான்” என்று கூறி அவர்களை விட்டு திரும்பிவிட்டார்கள்.

இந்த நயவஞ்சகர்கள் குறித்துதான் அல்லாஹ் கூறுகிறான்:

(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப) வர்களை (எங்களை விட்டும்) தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு “(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கியிருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 3:167)

மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி...

அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமியப் படையிலிருந்து அத்துமீறி விலகிச் சென்றபின், மீதமுள்ள 700 வீரர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் எதிரியை நோக்கிப் புறப்பட்டார்கள். எதிரிகளின் படை நபியவர்கள் சென்றடைய வேண்டிய உஹுதுக்கு மத்தியில் தடையாக இருந்தது. எனவே, நபியவர்கள் “எதிரிகளுக்கு அருகில் செல்லாமல் வேறு சுருக்கமான வழியில் யார் நம்மை உஹுத் வரையிலும் அழைத்துச் செல்வார்கள்?” என்று கேட்டார்கள்.

அப்போது அபூ கைஸமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் இருக்கிறேன்” என்று கூறி, ஹாஸா கிளையினருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் வழியாகவும் அவர்களின் களத்து மேடுகளின் வழியாகவும் அழைத்துச் சென்றார். இப்போது எதிரிகளின் படை மேற்குத் திசையில் இருந்தது.

வழியில் மிர்பா இப்னு கைழிக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக முஸ்லிம்களின் படை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவன் குருடனாகவும் நயவஞ்சகனாகவும் இருந்தான். முஸ்லிம்களின் படை தனது தோட்டத்தைக் கடந்து செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மண்ணை வாரி முஸ்லிம்களின் முகத்தில் எறிந்தான். மேலும், “நீ அல்லாஹ்வின் தூதராக இருந்தால் எனது தோட்டத்தில் நுழைய உனக்கு அனுமதியளிக்க மாட்டேன்” என்று கத்தினான். இதனால் கோபமடைந்த முஸ்லிம்கள் அவனைக் கொல்ல விரைந்தனர். நபி (ஸல்) அவர்களை அதிலிருந்து தடுத்து, “இவன் குருடன் இவனது உள்ளமும் குருடு இவனது பார்வையும் குருடு” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) இறுதியாக ‘உத்வத்துல் வாதி“யில் உஹுத் மலைக்கு அருகிலுள்ள கணவாயில் தனது படையுடன் இறங்கினார்கள். பிறகு மதீனாவை முன்னோக்கியவாறு தங்களது கூடாரங்களை அமைத்தார்கள். படையின் பிற்பகுதி உஹுத் மலையை நோக்கி இருந்தது. இந்த அமைப்பின்படி முஸ்லிம்களின் படைக்கும் மதீனா நகரத்துக்கும் மத்தியில் எதிரிகளின் படை தங்கியிருந்தது.