பக்கம் - 277 -
தற்காப்புத் திட்டம்

நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் இப்னு நுஃமான் அல் அன்ஸாயை (ரழி) நியமித்தார்கள். பின்பு அவர்களை ‘கனாத்’ என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்று பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தது.

நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்து இப்படையினரை அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள் தளபதிக்குக் கூறிய உபதேசம் வருமாறு: “எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.” (இப்னு ஹிஷாம்)

இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்) பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்: “நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள், நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து விடாதீர்கள்.” (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)

இதே அறிவுரை ஸஹீஹுல் புகாரியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது: “எங்களைப் பறவைகள் கொத்தித் தின்பதைப் நீங்கள் பார்த்தாலும், நான் உங்களுக்கு கூறியனுப்பும் வரை உங்களது இடத்தை விட்டு நீங்கள் அகன்றிட வேண்டாம். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து அவர்களின் சடலங்களை மிதித்து செல்வதைப் பார்த்தாலும் நான் கூறியனுப்பும் வரை நீங்கள் அகன்றிட வேண்டாம்.”

நபியவர்கள் இவ்வாறு கடுமையான ராணுவச் சட்டங்களைக் கூறி இந்த சிறிய குழுவை மலையில் நிறுத்தியதின் மூலம், முஸ்லிம்களின் பின்புறமாக எதிரிகள் ஊடுருவி அவர்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஒரு முக்கிய வழியை அடைத்து விட்டார்கள்.

படையின் வலப்பக்கத்தில் முன்திர் இப்னு அம்ர் (ரழி) அவர்களையும், இடப்பக்கத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களையும், ஜுபைருக்கு உதவியாக மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்களையும் நியமித்தார்கள். காலித் இப்னு வலீதின் தலைமையிலுள்ள எதிரிகளின் குதிரைப் படைகளை எதிர்க்கும் பொறுப்பை இடப்பக்கத்தில் நிறுத்தியிருந்த ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். மேலும், முஸ்லிம்களுடைய அணிகளின் முன் பகுதியில் வீரத்திலும் துணிவிலும் பிரபல்யமான, மேலும் ஒருவரே ஆயிரம் நபருக்கு சமமானவர் என்று புகழ்பெற்ற சிறந்த வீரர்களின் ஒரு குழுவை தேர்வு செய்து நிறுத்தினார்கள்.