பக்கம் - 278 -
நபி (ஸல்) அவர்களின் இத்திட்டமும் ராணுவ அமைப்பும் மிக்க நுட்பமானதாகவும் ஞானமிக்கதாகவும் இருந்தது. இதன் மூலம் நபியவர்களின் போர் நிபுணத்துவத்தின் தனிச்சிறப்பு தெளிவாகிறது. மேலும், ஒரு தளபதி அவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் நபியவர்கள் வகுத்த இத்திட்டத்தை விட சிறந்ததை நுணுக்கமானதை அவரால் ஏற்படுத்திட இயலாது. எதிரிகளின் போர்க்களம் வந்த பின்புதான் நபியவர்கள் தனது படையுடன் வந்தார்கள். இருப்பினும், மிகச் சிறந்த இடத்தை அங்கு தேர்வு செய்தார்கள். படையின் பின் பக்கத்தையும் வலப்பக்கத்தையும் உயரமான மலைகளைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள். போர் கடுமையாக மூழும்போது இஸ்லாமியப் படையை எதிரிகள் வந்து தாக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விட்டதால் படையின் பின்பக்கத்தையும் இடப்பக்கத்தையும் நபியவர்கள் பாதுகாத்தார்கள். முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டால் பின்வாங்கும் போது விரட்டி வரும் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது படைக்கு உயரமான இடத்தை நபியவர்கள் தேர்வு செய்தார்கள்.

மேலும், எதிரிகள் தங்களை நோக்கி முன்னேறி தங்களையும் தங்களது ராணுவ முகாம்களையும் கைப்பற்றிட நினைக்கும் போது அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இது வசதியாக இருக்கும். எதிரிகளை மைதானத்தின் மிகத் தாழ்ந்த பகுதியில் நபியவர்கள் ஒதுக்கி விட்டதில் மிகப் பெரிய நன்மை இருந்தது. அதாவது, ஒருக்கால் எதிரிகளுக்கு வெற்றி ஏற்பட்டால் எதிரிகள் வெற்றியின் பலனை முழுமையாக அடைந்துகொள்ள முடியாது. வெற்றி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் முஸ்லிம்கள் எதிரிகளை விரட்டிப் பிடிக்கும் போது முஸ்லிம்களின் கையிலிருந்து அவர்களால் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்களது தோழர்களில் வீரத்தால் புகழ் பெற்றவர்களை தேர்வு செய்து படையின் முன் நிறுத்தி அந்தக் குறையை நிறைவு செய்தார்கள்.

ஆக, ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை காலையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது படையை இவ்வாறு அமைத்து போருக்கு ஆயத்தமானார்கள்.

நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்

தான் கட்டளையிடும் வரை போரை ஆரம்பிக்கக் கூடாது என்று வீரர்களுக்குத் தடை விதித்தார்கள். நபியவர்கள் இரண்டு கவச ஆடை அணிந்திருந்தார்கள். தங்களது தோழர்களுக்குப் போர் புரிவதற்கு ஆர்வமூட்டியதுடன், எதிரிகளைச் சந்திக்கும் போது சகிப்புடன் இருந்து வீரத்தை வெளிப்படுத்தத் தூண்டினார்கள். தங்களின் தோழர்களுக்கு வீரத்தை ஊட்டும் வகையில் ஒரு கூர்மையான வாளை உருவி தங்களது தோழர்களிடம் “இவ்வாளை என்னிடம் வாங்கி அதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடமிருந்து அதை வாங்குவதற்கு பலர் முன் வந்தனர். அவர்களில் அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம், உமர் இப்னு கத்தாப் (ரழி) ஆகியோரும் அடங்குவர்.

இறுதியாக, அபூ துஜானா என்று அழைக்கப்படும் சிமாக் இப்னு கரஷா (ரழி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய கடமை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இந்த வாள் வளையும் வரை இதன் மூலம் எதிரிகளின் முகங்களை நீ வெட்ட வேண்டும்” என்றார்கள். “இறைத்தூதரே! இதன் கடமையை நான் நிறைவேற்றுவேன்” என்று அபூ துஜானா (ரழி) கூறினார்கள். நபியவர்கள் அவருக்கு அந்த வாளைக் கொடுத்தார்கள். அபூ துஜானா (ரழி) மாபெரும் போர் வீரராக இருந்தார். போர் சமயத்தில் மிகுந்த பெருமையுடன் நடந்து செல்வார். அவரிடம் ஒரு சிவப்பு நிற தலைப்பாகை இருந்தது. அத்தலைப்பாகையை அவர் அணிந்து கொண்டால் மரணிக்கும் வரை போர் புரிவார் என்று மக்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். நபியவர்களின் கரத்திலிருந்து வாளை அபூ துஜானா (ரழி) வாங்கியவுடன், தான் வைத்திருந்த சிவப்பு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு இரு அணிகளுக்கிடையில் பெருமையுடன் நடந்தார். இதைப் பார்த்த நபியவர்கள் “இவ்வாறு நடப்பதை அல்லாஹ் வெறுக்கிறான். ஆனால், இதுபோன்ற இடங்களிலேயே தவிர!” என்று கூறினார்கள்.