பக்கம் - 282 -
பின்பு முஸாஃபிஉ இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா என்பவன் கொடியைத் தாங்கினான். அவனை ஆஸிம் இப்னு ஸாமித் இப்னு அபுல் அஃப்லஹ் (ரழி) அம்பெறிந்துக் கொன்றார். அதற்குப் பின் அவனது சகோதரன் கிலாஃப் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவன் மீது ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) பாய்ந்து அவனை வெட்டி வீழ்த்தினார்கள். அதற்குப் பின் இவ்விருவர்களின் சகோதரன் ஜுலாஸ் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவனை தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) ஈட்டியால் குத்திக் கொன்றார்கள்.

இவ்வாறு அபூதல்ஹா எனப்படும் அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் இப்னு அப்து தான் குடும்பத்திலிருந்து ஆறு நபர்கள் கொடிக்காகக் கொல்லப்பட்டனர். பின்பு, கொடியை அப்து தான் கிளையினரிடமிருந்து அர்தா இப்னு ஷுரஹ்பீல் சுமந்தான். இவனை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) கொன்றார்கள். பின்பு, அக்கொடியை ஷுரைஹ் இப்னு காள் அதை சுமந்து கொள்ள அவனைக் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார். இந்த குஸ்மான் உண்மையில் நயவஞ்சகராக இருந்தார். அவர் மார்க்கத்திற்காகப் போர் செய்ய வரவில்லை. மாறாக, தனது இனத்திற்கு உதவ வேண்டும் என்ற வெறியில்தான் வந்திருந்தார். பின்பு கொடியை அம்ர் இப்னு அப்து மனாஃப் அல் அப்த சுமந்து கொள்ளவே அவரையும் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார். பின்பு, கொடியை ஷுரஹ்பீல் இப்னு ஹாஷிம் அல் அப்தயின் மகன் ஒருவன் சுமந்து கொள்ள அவனையும் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார்.

இவ்வாறு கொடியை சுமந்த அப்து தார் குடும்பத்தினர் பத்து நபர்களும் அழிக்கப்பட்டனர். இதற்குப் பின்பு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் கொடியைத் தாங்கிக் கொள்ள எவரும் இல்லாததால் அவர்களின் ஹபஷி அடிமை ஸுஆப் என்பவன் முன்வந்து கொடியைத் தாங்கிப் பிடித்து தனது எஜமானர்களை விட வீரத்துடன் போரிட்டான். போரில் அவனது இரு கரங்களும் துண்டிக்கப்படவே கொடியின் மீது மண்டியிட்டு அமர்ந்து கீழே விழுந்து விடாமல் பாதுகாக்க, அதைத் தனது நெஞ்சோடும் கழுத்தோடும் அணைத்துக் கொண்டான். இறுதியில், அவன் கொல்லப்பட்டபோது “அல்லாஹ்வே! நான் முடிந்தவரை முயற்சி செய்தேன். என்மீது இனி குற்றமில்லை அல்லவா!” என்று கூறியவனாகவே செத்தான்.

இவ்வடிமை ஸுஆப் கொல்லப்பட்டதற்குப் பின் எதிரிகளின் கொடி பூமியில் சாய்ந்தது. அதைச் சுமப்பதற்கு யாரும் இல்லாததால் இறுதி வரை அது கீழேயே கிடந்தது.

மற்ற பகுதிகளில் சண்டை

இணைவைப்பவர்களின் கொடியைச் சுற்றி போர் கடினமாக நடந்ததைப் போன்று போர்க் களத்தின் மற்ற பகுதிகளிலும் உக்கிரமான போர் நடந்தது. முஸ்லிம்கள் எதிரிகளின் படையை ,இறைநம்பிக்கை எனும் பலத்துடன் மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு அவர்களைத் திக்குமுக்காட வைத்தனர். தங்களுக்கு மத்தியில் ‘அம்த் அம்த்’ என்ற இரகசிய அடையாள வார்த்தையை கூறிக்கொண்டே எதிரிகளின் படையைப் பிளந்துச் சென்றனர்.

சிவப்புத் தலைப்பாகை அணிந்து, நபி (ஸல்) அவர்களின் வாளை ஏந்தி, அதன் கடமையை நிறைவேற்ற வேண்டுமென உறுதி கொண்டிருந்த அபூ துஜானா (ரழி) எதிரிகளின் படைக்குள் புகுந்து தனக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியையும் வெட்டி வீழ்த்தினார்.

இதைப் பற்றி ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்: