பக்கம் - 283 -
நபியவர்களிடம் வாளை நான் கேட்டபோது அதை எனக்கு அளிக்காமல் அபூ துஜானாவுக்கு கொடுத்ததைப் பற்றி எனக்குக் கவலையாக இருந்தது. நான் நபியவர்களின் மாமி ஸஃபிய்யாவின் மகன் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவன். அவரை விட முந்தி அந்த வாளை நபியவர்களிடம் நான்தான் கேட்டேன். ஆனால் என்னை விட்டுவிட்டு நபியவர்கள் அவருக்கு அந்த வாளை கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி என்னதான் அபூதுஜானா செய்துவிடப் போகிறார் என்று பார்ப்போம்?! என்று எனக்குள் கூறிக்கொண்டு அவரைத் தொடர்ந்து கவனித்தேன். அவர் சிவப்பு தலைப்பாகையை எடுத்து அணிந்தார். இதைப் பார்த்த மதீனாவாசிகள் “அபூ துஜானா மரணத்தின் தலைப்பாகையை எடுத்துவிட்டார்” என்று கூறினார்கள்.

அதை அணிந்துகொண்ட அபூதுஜானா பின்வருமாறு கவிதையைப் பாடி, போரில் குதிக்கலானார்:

“பேரீச்சந்தோட்டத்திலே நண்பர் என்னிடம் ஒப்பந்தம் செய்தார்.
அல்லாஹ் மற்றும் தூதருடைய வாளால் நான் போரிடுவேன்.
ஒருபோதும் படையின் பிற்பகுதியில் நில்லேன்.”

அவர் சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. போர்க்களத்தில் இணை வைப்பவர்களில் ஒருவன் எங்களில் காயமடைந்தவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தொல்லை செய்து கொண்டிருந்தான். அபூ துஜானா (ரழி) அவனுக்கு அருகில் சென்ற போது “அல்லாஹ்வே! அவ்விருவரையும் சந்திக்க வை” என்று நான் பிரார்த்தித்தேன். அவ்வாறே அபூ துஜானாவும் அந்த எதிரியும் சந்தித்து சண்டையிட்டனர். எதிரி அபூ துஜானாவை வெட்ட வந்த போது அபூ துஜானா (ரழி) தனது கேடயத்தால் அதைத் தடுத்தார். அவனது வாள் அபூ துஜானாவுடைய கேடயத்துக்குள் சிக்கிக் கொண்டது. உடனே அபூ துஜானா (ரழி) தனது வாளால் அவனை வெட்டி வீழ்த்தினார். (இப்னு ஹிஷாம்)

பின்பு அபூதுஜானா (ரழி) எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு செல்லுகையில் குறைஷிப் பெண்களின் தளபதி ஹிந்து“க்கருகில் செல்ல நேர்ந்தது. ஆனால், அவருக்கு அவர் யார் என்று தெரியாது. இதைப் பற்றி அபூ துஜானாவே கூறுகிறார்:

போருக்கு மக்களை பயங்கரமாகத் தூண்டிக் கொண்டிருக்கும் ஒருவரை நான் பார்த்தேன். நான் அவரை முன்னோக்கிச் சென்று அவர் மீது என் வாளை வீச எண்ணிய போது அவர் என் பக்கம் திரும்பினார். அவரைப் பெண் என்று அறிந்து கொண்ட நான் ஒரு பெண்ணைக் கொலை செய்து நபியவர்கள் கொடுத்த வாளின் கண்ணியத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காக அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.

அந்தப் பெண் ஹிந்த் பின்த் உத்பாவாகும். இதைப் பற்றி ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கூறுகிறார்கள்: அபூதுஜானா ஹி ந்துடைய தலையின் நடுப் பகுதிக்கு வாளை கொண்டு சென்று விட்டு திருப்பிவிட்டார். இதைக் கண்ட நான் “அபூதுஜானா ஏன் இவ்வாறு செய்தார்? அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் நன்கறிந்தவர்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.” (இப்னு ஹிஷாம்)

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) சிங்கம் பாய்ந்து தாக்குவதைப் போரில் எதிரிகளைப் பாய்ந்து தாக்கியவராக எதிரிப்படையின் நடுப்பகுதிக்குள் சென்றுவிட்டார். அவருக்கு முன் எதிர்த்து நின்ற வீரமற்ற எதிரிகள் புயல் காற்றில் இலைகள் பறப்பது போன்று அவரைப் பார்த்து விரண்டனர். இணைவைப்பாளர்களின் கொடியை சுமந்திருந்தவர்களை அழிப்பதில் ஹம்ஜா (ரழி) எடுத்துக் கொண்ட பங்கைப் பற்றி இதற்கு முன்பே நாம் கூறியிருக்கின்றோம். இறுதியாக, முன்னணி வீரர்களில் இருந்த இவர் கொல்லப்பட்டார். போர் மைதானத்தில் இவருடன் நேருக்கு நேர் போரிட்டு கொல்ல சக்தியற்ற எதிரிகள் கோழைத்தனமானத் தாக்குதல் நடத்தி இவரை வஞ்சகமாகக் கொன்றனர்.