பக்கம் - 284 -
அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்

அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி இப்னு ஹர்ப் அது குறித்து கூறுகிறார்: நான் ஜுபைர் இப்னு முத்ம்மின் அடிமையாக இருந்தேன். அவனது தந்தையின் சகோதரன் துஅய்மா இப்னு அதீ பத்ர் போரில் கொல்லப்பட்டான். குறைஷிகள் உஹுத் போருக்குப் புறப்பட ஆயத்தமான போது ஜுபைர் என்னிடம் “முஹம்மதுடைய சிறிய தந்தை ஹம்ஜாவை நீ கொன்றுவிட்டால் உன்னை நான் உரிமையிட்டு விடுகிறேன்” என்று கூறினான். நான் மக்களுடன் சேர்ந்து புறப்பட்டேன். ஹபஷிகள் திறமையாக ஈட்டி எறிவது போரில் நானும் ஈட்டி எறிவதில் திறமையானவன். நான் எறியும் ஈட்டி மிகக் குறைவாகவே இலக்கைத் தவறும். போர் மூண்டபோது நான் ஹம்ஜாவைத் தேடி அலைந்தேன். வீரர்களுக்கு மத்தியில் அவரைச் சாம்பல் நிற ஒட்டகத்தைப் போன்று பார்த்தேன். அவர் படை வீரர்களைப் பிளந்து கொண்டிருந்தார். அவருக்கு முன் நிற்பதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. நான் அவரைக் கொல்ல நாடி அதற்காக ஆயத்தமானேன். அவர் எனக்கருகில் வரும் வரை ஒரு மரம் அல்லது ஒரு பாறைக்குப் பின் மறைந்து கொள்ள நாடினேன். ஆனால், திடீரென ஸிபா இப்னு அப்துல் உஜ்ஜா ஹம்ஜாவுக்கு முன் வந்தான். அவனைப் பார்த்த ஹம்ஜா (ரழி) அவனுக்குக் கோபமூட்டுவதற்காக “ஓ ஆணுறுப்பின் தோலை வெட்டுபவளின் மகனே! என்னருகில் வா!” என்றழைத்தார்கள். (அவனது தாய் கத்னா செய்யும் தொழில் செய்து வந்தாள்.) அவன் அருகில் வந்தவுடன் ஹம்ஜா (ரழி) அவனது தலையை உடம்பிலிருந்து தனியாக்கினார்.

தொடர்ந்து வஹ்ஷி கூறுகிறார்: நான் நல்ல தருணம் பார்த்து எனது சிறிய ஈட்டியால் அவரை நோக்கி எறிந்தேன். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து அவரது மர்மஸ்தானத்தின் பக்கமாக வெளியாகியது. அவர் என்னை நோக்கி வர முயற்சி செய்தார். ஆனால் அவரால் வர முடியவில்லை. நான் அவரை அதே நிலையில் விட்டுவிட அவர் இறந்துவிட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து அவரிடம் வந்து எனது ஈட்டியை எடுத்துக் கொண்டு கூடாரத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். இவரைத் தவிர மற்றவர்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. இவரை நான் கொன்றது எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது போல் போர் முடிந்து மக்கா திரும்பியதும் எனக்கு விடுதலை கிடைத்தது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

நிலைமையைக் கட்டுப்படுத்துவது

அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சிங்கம் என்று பெயர் பெற்ற மாவீரர் ஹம்ஜா (ரழி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தாலும் முஸ்லிம்கள் நிலைமைகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

அன்றைய தினம் அபூபக்ர், உமர், அலீ, ஜுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், ஸஅதுப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு ரபீஃ, அனஸ் இப்னு நள்ர் (ரழி) இன்னும் இவர்களைப் போன்ற நபித் தோழர்களில் பலர் போரில் காட்டிய வீரம் இணைவைப்பவர்களின் உறுதியைக் குலைத்து அவர்களது தோள் வலிமையைத் தளர்வடையச் செய்தது.