பக்கம் - 286 -
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) தனது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஹிந்த் பின்த் உத்பா மற்றும் அவளின் தோழிகள் தங்களின் ஆடைகளை உயர்த்திக் கொண்டு ஓடினர். நான் அவர்களின் கெண்டைக் கால்களைப் பார்த்தேன். அவர்களை நாங்கள் பிடிக்க நாடியிருந்தால் பிடித்திருப்போம். காரணம், அதற்கு எந்தத் தடையும் எங்களுக்கு இருக்கவில்லை.” (இப்னு ஹிஷாம்)

ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள பரா இப்னு ஆஸிஃப் (ரழி) அறிவிப்பில் வருவதாவது: “நாங்கள் எதிரிகளை எதிர்த்து போரிட்ட போது பெண்களைப் பார்த்தோம். அவர்கள் தோல்வியுற்று விரண்டோடினர். தங்களது கெண்டைக் கால்களில் அணிந்திருந்த சலங்கைகள் தெரியும் அளவுக்கு ஆடைகளை உயர்த்திக் கொண்டு மலைகளின் மேல் ஓடினர். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைப் பின்தொடர்ந்துச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தி, அவர்களின் பொருட்களையும் கைப்பற்றினர்.

அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு

சிறியதாக இருந்த இஸ்லாமியப் படை வரலாற்றில் மற்றொரு முறை மக்காவாசிகளுக்கு எதிராய் மாபெரும் வெற்றி முத்திரையைப் பதித்தனர். இவ்வெற்றி பத்ரில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியை விட சற்றும் குறைவானது அல்ல. இந்நேரத்தில் மலை மீது நிறுத்தப்பட்டிருந்த அம்பெறியும் வீரர்களின் பிரிவில் பெரும்பாலோர் மாபெரும் தவறு ஒன்றைச் செய்தனர். இத்தவறினால் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது. முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சேதமும் நஷ்டமும் ஏற்பட்டது. நபியவர்களை எதிரிகள் கொன்றுவிட இது ஒரு வாய்ப்பாக இருந்தது. அம்பெறியும் வீரர்களின் இந்தத் தவறினால் ஏற்பட்ட பின்விளைவு, முஸ்லிம்களின் வீரத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. பத்ர் போரின் வெற்றிக்குப் பின் நிராகரிப்பாளர்களுக்கு முஸ்லிம்களின் மீதிருந்த அச்சத்தையும் அம்பெறியும் வீரர்களின் இந்தத் தவறு போக்கிவிட்டது.

வெற்றி அல்லது தோல்வி எது ஏற்பட்டாலும் அம்மலையைவிட்டு நகரக் கூடாது என்று இந்த அம்பெறியும் வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையின் வாசகங்களை நாம் முன்பு கூறியிருந்தோம். இவ்வளவு ஆணித்தரமாக நபியவர்கள் கட்டளையிட்டிருந்தும் வெற்றி கிடைத்து எதிரிகளின் பொருட்களை முஸ்லிம்கள் ஒன்று திரட்டுவதைப் பார்த்த அத்தோழர்களில் சிலருக்கு உலக ஆசை ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள் “இதோ வெற்றிப் பொருள்! இதோ வெற்றிப் பொருள்! உங்களது தோழர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இதற்குப் பின்பும் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கூறினர்.

அச்சமயம் அவர்களின் தளபதி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) நபி (ஸல்) அவர்களிட்ட கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டினார். மேலும் “அல்லாஹ்வின் தூதர் உங்களுக்கு கூறியதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று தோழர்களை எச்சரித்தார். என்றாலும் அந்தக் கூட்டத்தின் பெரும்பாலானோர் இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாமும் மக்களுடன் வெற்றிப் பொருளைச் சேகரிப்போம்”என்று கூறி அப்பிரிவின் நாற்பது அல்லது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து இறங்கி படையுடன் சேர்ந்து பொருளை சேகரித்தார்கள். இதனால் முஸ்லிம் படையினரின் பின்பகுதி பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களும் அவன் தோழர்களில் ஒன்பது அல்லது அதைவிடக் குறைவானவர்கள் மட்டுமே தங்களுக்கு அனுமதி அல்லது மரணம் வரும் வரை அவ்விடத்திலேயே நிலையாக இருந்துவிட வேண்டுமென்று அங்கேயே தங்கிவிட்டனர்.