பக்கம் - 287 -
காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்

இந்தச் சூழ்நிலையைக் காலித் இப்னு வலீத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம்களை பின்புறம் தாக்குவதற்காக அம்பெறியும் வீரர்கள் இருந்த மலையை நோக்கி அதிவேகமாகச் சென்றார். அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களையும் அவரது தோழர்களையும் அதிவிரைவிலேயே கொன்று விட்டு முஸ்லிம்களின் படையின் பின்புறமாகச் சென்று தாக்கினார். காலிதின் குதிரை வீரர்கள் இதை உணர்த்தும் பொருட்டு பெரும் சப்தமிட்டவுடன், தோல்வியுற்று புறமுதுகுக் காட்டி ஓடிக்கொண்டிருந்த இணைவைப்பவர்கள் தங்களுக்கு ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்து விட்டதை அறிந்து முஸ்லிம்களை நோக்கித் திரும்பினர். ‘அம்ரா பின்த் அல்கமா’ என்ற பெண் மண்ணில் வீசப்பட்டிருந்த இணைவைப்பவர்களின் கொடியை உயர்த்திப் பிடித்தாள். இணைவைப்பவர்கள் தங்களது கொடியைச் சுழற்றியவர்களாக சிலர் சிலரைக் கூவி அழைத்தனர். பிறகு ஒன்று சேர்ந்து முஸ்லிம்கள் மீது பாய்ந்தனர். இதனால் முஸ்லிம்கள் முன்னும் பின்னும் தாக்கப்பட்டனர்.

நபியவர்களின் நிலை

நபி (ஸல்) அவர்கள் ஒன்பது நபர்கள் கொண்ட தங்கள் தோழர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இருந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) முஸ்லிம்களின் வீரத்தையும், அவர்கள் இணைவைப்பவர்களை விரட்டுவதையும் படையின் பின்பகுதியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நபியவர்கள் திடீரென காலிதின் குதிரை வீரர்களால் சூழப்பட்டார்கள். இப்போது நபியவர்களுக்கு முன் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று, உடனடியாக தங்களையும் தங்களுடைய ஒன்பது தோழர்களையும் பாதுகாத்துக் கொண்டு ஒரு ஆபத்தில்லாத இடத்தில் ஒதுங்கி விடுவது. மேலும், எதிரிகளால் சுற்றி வளைக்கப் பட்ட தங்களது படையை ‘அதற்கு விதிக்கப்பட்ட விதியை அது சந்திக்கட்டும்’ என்று விட்டு விடுவது. இரண்டாவது, தனக்கேற்படும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் தனது தோழர்களைத் தன்னை நோக்கி வருமாறு கூவி அழைப்பது. அவ்வாறு ஒன்று சேரும் அந்த தோழர்களைக் கொண்டே எதிரிகளால் சூழப்பட்ட தனது படையைக் காப்பாற்றி உஹுத் மலைக் குன்றுகளின் உச்சிக்கு அழைத்து செல்ல முயற்சி செய்வது.

இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. தனது சப்தத்தை உயர்த்தி தனது தோழர்களை “அல்லாஹ்வின் அடியார்களே! என் பக்கம் வாருங்கள்” என்று அழைத்தார்கள். தனது குரல் ஒலியை முஸ்லிம்களை விட எதிரிகள்தான் முதலில் கேட்பார்கள். அவ்வாறு கேட்டால், தான் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகுவோம் என்றிருந்தும் அதைப் பொருட் படுத்தாமல் தன் தோழர்களைக் கூவி அழைத்தார்கள்.

ஆம்! அவ்வாறே எதிரிகள் நபி (ஸல்) அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்கள் நபியவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக அவர்கள் வந்து சேர்ந்தனர்.

முஸ்லிம்கள் சிதறுதல்

எதிரிகள் முஸ்லிம்களை சுற்றி வளைத்துக் கொண்டபோது முஸ்லிம்களின் ஒரு சாரார் நிலை தடுமாறினர். அதாவது, இவர்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று போர் மைதானத்திலிருந்து ஓடினார்கள். இவர்களில் ஒரு சாரார் ஓடிய ஓட்டத்தில் மதீனாவிற்குள் நுழைந்தனர். மற்றும் சிலர் மலை உச்சிகளுக்கு மேலே ஏறிக்கொண்டனர்.

மற்றும் ஒரு சாரார் போர்க் களத்தில் இணைவைப்பவர்களோடு ஒன்றோடு ஒன்று கலந்து விட்டனர். யார் எந்தப் படையை சேர்ந்தவர் என்று பிரித்து அறிய முடியவில்லை. இதனால் முஸ்லிம்கள் தங்களுக்குள் சிலர் சிலரை தவறுதலாக தாக்க நேர்ந்தது.