பக்கம் - 29 -
இவ்வாறு அரபிய தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கும் சிலை வணக்கக் கலாச்சாரம் பரவியது. முதலில் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பிறகு ஒவ்வொரு வீட்டிற்குமென தனித்தனிச் சிலைகள் இருந்தன. சங்கைமிக்க கஅபாவையும் சிலைகளால் நிரப்பினர். நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது கஅபாவைச் சுற்றிலும் 360 சிலைகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் தங்களது கரத்திலிருந்த தடியால் அவைகளைக் குத்தி கீழே தள்ளினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் உத்தரவின்படி அவைகள் கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன. மேலும், கஅபாவின் உட்புறத்தில் சிலைகளும் உருவப்படங்களும் இருந்தன. அவற்றில் நபி இப்றாஹீம் (அலை) மற்றும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது கரங்களில் அம்புகளைப் பற்றியவாறு இருப்பதுபோன்ற உருவப் படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் புனித கஅபாவிலிருந்து நீக்கி அழிக்கப்பட்டன. (ஸஹீஹுல் புகாரி)

மக்கள் இதுபோன்ற வழிகேட்டில் நீடித்து வந்தார்கள். அதுபற்றி அபூ ரஜா உதாதீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் கற்களை வணங்கி வந்தோம். நாங்கள் வணங்கும் கல்லைவிட அழகிய கல்லைக் கண்டால் கையிலிருப்பதை தூக்கி எறிந்துவிட்டு புதியதை எடுத்து வணங்குவோம். எங்களுக்கு வணங்குவதற்கான கல் கிடைக்கவில்லையெனில் மண்ணைக் குவியலாக்கி அதன்மேல் ஆட்டின் பாலைக்கறந்து அதை வலம் வருவோம்.” (ஸஹீஹுல் புகாரி)

ஆக, இணை வைத்தலும், சிலை வணக்கமும் அந்த அறியாமைக் காலத்தில் மிக உயரிய நெறியாகப் பின்பற்றப்பட்டது. அத்துடன் அவர்கள் தாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதாகவும் எண்ணிக்கொண்டனர்.

அவர்களிடையே சிலைவணக்கம் மற்றும் இணைவைத்தல் உருவானதற்கான அடிப்படை என்னவெனில் அவர்கள் மலக்குகளையும், ரஸூல்மார்களையும், நபிமார்களையும், அல்லாஹ்வின் நல்லடியார்களையும், இறைநேசர்களையும் அல்லாஹ்வுக்கு மிக நெருங்கியவர்கள்; அவனிடம் மிகுந்த அந்தஸ்தும் கௌரவமும் பெற்றவர்கள் எனக் கருதினர். அவர்களிடமிருந்து பல்வேறு அற்புதங்கள் வெளிப்பட்டதைக் கண்ட அம்மக்கள் தனக்கு மட்டுமே உரித்தான சில ஆற்றல்களை அல்லாஹ் அந்த சான்றோர்களுக்கும் அருளியுள்ளான் என்றும் நம்பினர். அச்சான்றோர்கள் இத்தகைய ஆற்றல்களாலும் தங்களுக்கு அல்லாஹ்விடமுள்ள கண்ணியத்தினாலும் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடுவர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள்; யாருக்கும் எதையும் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்டுப் பெறத் தகுதியில்லை இச்சான்றோர் மூலமாகவே அல்லாஹ்வை அணுக முடியும்; அவர்களே அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள்; அவர்களது அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு அல்லாஹ் அவர்களது சிபாரிசுகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வான்; அவர்கள் மூலமாகவே அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவர்கள்தான் அல்லாஹ்விடம் அடியார்களை மிக நெருக்கமாக்கிவைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும் எண்ணினார்கள்.

இந்த எண்ணம் நாளடைவில் உறுதியான நம்பிக்கையாக வலுப்பெற்றது. அவர்களைத் தங்களது பாதுகாவலர்களாகக் கருதி அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையே நடுவர்களாக்கிக் கொண்டனர். அவர்களது நேசத்தைப் பெற்றுத் தரும் வழிமுறைகளென தாங்கள் கருதிய அனைத்தையும் கொண்டு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். அச்சான்றோர்களுக்காக அவர்களின் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கினர். அவற்றுள் சில உண்மையாய் உருவப்படங்களாக இருந்தன. சில உருவப் படங்களை தங்களது கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்தனர். இந்த உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் அரபி மொழியில் ‘அஸ்னாம்’ என்று கூறப்படும்.