பக்கம் - 295 -
செயற்கரிய வீரதீரச் செயல்கள்

முஸ்லிம்கள் இந்நாளில் வரலாறு காணாத அற்புதமான வீரதீரச் செயல்களையும் தியாகங்களையும் புரிந்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்களுக்கு முன் அபூ தல்ஹா (ரழி) தன்னையே தடுப்பாக ஆக்கி நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபியவர்களைப் பாதுகாத்தார்கள்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போர் அன்று அபூ தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு முன்பாக நின்று தனது கேடயத்தால் நபியவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள். அபூ தல்ஹா (ரழி) மிக வேகமாக அம்பெறியும் திறமை பெற்றவர்கள். அன்றைய தினத்தில் மட்டும் அவரது கரத்தில் இரண்டு அல்லது மூன்று வில்கள் உடைந்தன. ஒருவர் அபூ தல்ஹாவுக்கு அருகில் அம்புக்கூட்டுடன் சென்ற போது “அதை அபூ தல்ஹாவுக்குக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும். நபியவர்கள் எதிரிகளின் நிலையை அறிந்து கொள்ள அவ்வப்போது தங்களது தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ தல்ஹா (ரழி) “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் எட்டிப் பார்க்காதீர்கள் எதிரிகளின் அம்பு உங்களைத் தாக்கிவிடலாம் உங்களது நெஞ்சுக்கு முன் எனது நெஞ்சு இருக்கட்டும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அபூதல்ஹா (ரழி) ஒரு கேடயத்தால் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். அவர் திறமையாக அம்பெறிபவராக இருந்தார். அவர் அம்பெறியும் போது அந்த அம்பு எங்கே விழுகிறது என்று நபியவர்கள் தலையை உயர்த்திப் பார்ப்பார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூ துஜானா பலமிக்க இரும்பு கவச ஆடை அணிந்திருந்தார். நபி (ஸல்) அவர்களை நோக்கி வரும் அம்புகளைத் தன் முதுகை கேடயமாக்கி தடுத்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்களின் பல்லை உடைத்து விட்டு குதிரைமேல் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தான் உத்பா இப்னு அபீ வக்காஸ். இவனை ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ (ரழி) பின்தொடர்ந்துச் சென்று அவனது தலையை வெட்டி வீசினார். பிறகு அவனது குதிரையையும் வாளையும் எடுத்து வந்தார். இவன் நபியவர்களின் பாதுகாவலரான ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களின் சகோதரனாவான். இவனைத் தீர்த்து கட்ட ஸஅது (ரழி) ஆர்வமாக இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஹாத்திப் (ரழி) அந்த வாய்ப்பைத் தட்டிச் சென்றார்.

அம்பெறிவதில் திறமை பெற்ற வீரர்களில் ஒருவரான ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) மரணம் வரை போர் புரிவேன் என்று நபி (ஸல்) அவர்களிடம் இப்போருக்கிடையில் வாக்குப் பிரமாணம் செய்தார் இவர் இப்போரில் எதிரிகளை விரட்டி அடிப்பதில் பெரும் பங்காற்றினார்.

அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களும் அம்பெறிந்தார்கள். இது குறித்து கதாதா இப்னு நுஃமான் (ரழி) அறிவிக்கின்றார்கள்: வில்லின் நரம்பு அறுபடும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்பெறிந்தார்கள். அறுந்துவிட்ட அந்த வில்லை கதாதா இப்னு நுஃமான் (ரழி) தன்னிடம் வைத்திருந்தார்கள்.

கதாதாவின் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் அது பிதுங்கிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அதை தனது கையால் அவரது கண்குழியில் வைத்து பிரார்த்தித்தாhர்கள். அது மிக அழகியதாகவும் கூர்ந்த பார்வை உடையதாகவும் அமைந்து விட்டது.