பக்கம் - 296 -
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மிக மும்முரமாகப் போர் செய்தார். அவரது வாயில் பலத்த காயம் ஏற்பட்டு பல் உடைந்தது. இருபதுக்கும் அதிகமான காயங்கள் அவருக்கு ஏற்பட்டன. அவற்றில் சில காலில் ஏற்பட்டதால் அவரால் சில காலம் வரை நடக்க முடியவில்லை.

முஸ்லிம்களிடம் சண்டை செய்து கொண்டிருந்த இப்னு கமிஆவிடம் நபித்தோழியரான உம்மு அமாரா (ரழி) மோதினார். அவன் இவரது புஜத்தில் வெட்டியதால் இவருக்கு பெரும் காயம் ஏற்பட்டது. இவரும் அவனைப் பலமுறை வாளால் தாக்கினார்கள். ஆனால், அவன் மீது இரண்டு கவச ஆடைகள் இருந்ததால் அவன் தப்பித்துக் கொண்டான். இப்போரில் உம்மு அமாராவுக்கு 12 பலத்த காயங்கள் ஏற்பட்டன.

முஸ்அப் இப்னு உமைரும் போரில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி எதிரிகளுடன் சளைக்காமல் சண்டையிட்டார். தனது கையில் கொடியை ஏந்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களைத் தாக்கச் சென்று கொண்டிருந்த இப்னு கமிஆ மற்றும் அவனது நண்பர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்கள் முஸ்அபின் வலக்கரத்தை வெட்டிவிடவே கொடியை தனது இடக்கரத்தால் பற்றிக் கொண்டார். பின்பு, இடது கையையும் வெட்டிவிடவே மண்டியிட்டு தனது கழுத்தாலும் நெஞ்சாலும் அதை அணைத்துக் கொண்டார். முஸ்அப் தோற்றத்தில் நபியவர்களைப் போன்று இருந்தார். எனவே, எதிரி இப்னு கமிஆ முஸ்அபைக் கொன்றுவிட்டு, தான் நபியவர்களைக் கொன்றதாக எண்ணி, இணைவைப்பவர்களிடம் சென்று “நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார்” என்று கூச்சலிட்டான். (இப்னு ஹிஷாம்)

நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!

இவன் கூச்சலிட்ட சில நிமிடங்களிலேயே நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவியது. இந்நேரத்தில் எதிரிகளால் சூழப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்களின் உறுதி குலைந்தது. அவர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது. எனினும், இந்த வதந்தியால் எதிரிகளின் தாக்குதல் சற்றே தணிந்தது. அதற்குக் காரணம், நபியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற தங்களது நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டோம் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, தாக்குதலைக் குறைத்துக் கொண்டு போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களைச் சிதைப்பதில் ஈடுபட்டனர்.

நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்

முஸ்அப் கொல்லப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கொடியை அலீ இப்னு அபூதாலிபிடம் வழங்கினார்கள். நபியவர்களிடமிருந்து கொடியை வாங்கிய அலீ (ரழி) கடுமையாக எதிரிகளை தாக்கி கதிகலங்க வைத்தார்கள். அங்கிருந்த மற்ற நபித்தோழர்களும் எதிரிகளை எதிர்த்து சண்டையிடுவதிலும், முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் தீவிரமாயினர்.

எதிரிகளால் சூழப்பட்டிருந்த முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக தன்னுடன் இருந்த சிறு படையை அழைத்துக் கொண்டு எதிரிகளின் படையை நபி (ஸல்) அவர்கள் பிளந்தார்கள். அப்போது நபியவர்களை முஸ்லிம்களில் கஅப் இப்னு மாலிக் (ரழி) முதன் முதலாக பார்த்து விட்டு மிக உயர்ந்த சப்தத்தில் “முஸ்லிம்களே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். இதோ... அல்லாஹ்வின் தூதர் வந்து விட்டார்கள்” என்று உரக்கக் கூறினார். தன்னை எதிரிகள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக கஅபிடம் அமைதியாக இரு! என்று நபியவர்கள் சைகை செய்தார்கள். எனினும், முஸ்லிம்களின் காதுகளுக்குக் கஅபின் குரல் எட்டிவிடவே நபியவர்களை நோக்கி முப்பது தோழர்கள் ஒன்று கூடினர்.