பக்கம் - 297 -
இவ்வாறு தோழர்களின் பெரும் கூட்டம் ஒன்று சேர்ந்த பின், தாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளை விளக்கியவர்களாக தங்களது படையை மலை கணவாய்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சென்றார்கள். நபியவர்களின் இத்திட்டத்தைத் தடுக்க எதிரிகள் பல வழிகளிலும் போராடினர். இருந்தும் இஸ்லாமியச் சிங்கங்களின் வீரத்திற்கு முன் அவர்கள் அனைவரும் தோல்வியையே கண்டனர்.

இணைவைப்பவர்களின் குதிரை வீரர்களில் ஒருவனான உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா என்பவன் நபி (ஸல்) அவர்களை நோக்கி “இவர் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது” என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான். நபியவர்கள் அவனை எதிர்ப்பதற்குத் ஆயத்தமானார்கள். ஆனால் வழியிலிருந்த பள்ளத்தில் அவனது குதிரை தடுமாறி விழுந்தது. ஹாரிஸ் இப்னு சிம்மா (ரழி) அவனை எதிர்கொண்டு அவனது காலில் வெட்டினார்கள். அதனால் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. பின்பு அவன் மீது பாய்ந்து அவனது கதையை முடித்துவிட்டு, அவனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் வந்தார்கள்.

இக்காட்சியைப் பார்த்த மக்காவின் குதிரை வீரர்களில் மற்றொருவனான அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் என்பவன் ஹாரிஸ் இப்னு சிம்மாவிடம் சண்டையிட்டான். அவரது புஜத்தை வெட்டிக் காயப்படுத்தினான். அவரை அவன் கொல்வதற்கு முன் முஸ்லிம்கள் அவரைப் பாதுகாத்துக் கொண்டார்கள். ஹாரிஸ் தாக்கப்பட்டதை பார்த்து கொதித்தெழுந்த அஞ்சா நெஞ்சன், வீராதி வீரர் அபூ துஜானா (ரழி) எதிரி அப்துல்லாஹ் இப்னு ஜாபின் தலையைக் கண் சிமிட்டும் நொடியில் வெட்டி வீசினார்.

போர் இவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்த வேளையில் அல்லாஹுத் தஆலா முஸ்லிம்களுக்கு நிம்மதியளிக்கும் பொருட்டு சிறு தூக்கத்தை இறக்கினான். இதைப் பற்றி திருமறையிலும் கூறப்பட்டுள்ளது. இதோ... அபூதல்ஹா (ரழி) அது பற்றி கூறுகிறார்:

“உஹுத் போரில் சிறு தூக்கம் பீடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எனது கையிலிருந்து பலமுறை வாள் வீழ்ந்தது நான் அதை எடுக்கிறேன் அது கீழே விழுகிறது நான் அதை எடுக்கிறேன் அது கீழே விழுகிறது.” (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு அல்லாஹ் பெரிய துன்பமான சமயத்திலும் முஸ்லிம்களுக்கு மன நிம்மதியை வழங்கினான்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு வழியாக எதிரிகளுடன் போராடி தன்னுடன் இருந்த முஸ்லிம்களை மலைக் கணவாய்க்கு அருகில் திட்டமிட்டவாறு ஒதுக்கிக் கொண்டார்கள். மேலும், மற்ற இஸ்லாமியப் படைகளும் இந்தப் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போர்த் திறமைக்கு முன் காலிதின் போர்த் திறமை தோற்றது.