பக்கம் - 300 -
2) பல முஸ்லிம் பெண்மணிகளும் போர் முடியும் தருவாயில் மைதானத்துக்கு வந்து போரில் தங்களால் முடிந்த பங்காற்றினார்கள்.

அனஸ் (ரழி) இதைப் பற்றி கூறுகிறார்கள்: நபியவர்களின் மனைவியான ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உம்மு சுலைம் (ரழி) அவர்களையும் பார்த்தேன். அவர்கள் தங்களது கெண்டைக் கால்கள் தெரியுமளவு ஆடையை உயர்த்தியவர்களாகத் தோல் துருத்திகளில் தண்ணீர் நிரப்பி, அதை முதுகில் சுமந்து வந்து முஸ்லிம்களுக்குப் புகட்டினார்கள். தண்ணீர் தீர்ந்துவிடவே மீண்டும் நிரப்பி வந்து புகட்டினார்கள். இவ்வாறு இறுதி வரை சிரமம் பாராது பல முறை நிரப்பி வந்து காயமடைந்த முஸ்லிம்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும் உமர் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் உம்மு ஸலீத் என்ற அன்சாரிப் பெண்ணும் தோல் துருத்தியில் தண்ணீர் நிரப்பி வந்து எங்களது தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உம்மு அய்மன் (ரழி) என்ற பெண்மணியும் போர் மைதானத்திற்கு வந்தார்கள். முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின் முகத்தில் மண்ணை வாரி இறைத்தார். மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து “இந்தா! ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!” என்று ரோஷமூட்டினார். பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார். அது சமயம் ‘ஹிப்பான் இப்னு அரக்கா’ எனும் அரக்கன் ஒருவன் அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான். அவர்கள் கீழே விழுவே ஆடை விலகியது. அந்த மூடன் இதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். இக்காட்சி நபி (ஸல்) அவர்களை சிரமத்திற்குள்ளாக்கியது. எனவே, கூர்மையற்ற ஓர் அம்பை ஸஅது இப்னு அபீவக்காஸிடம் கொடுத்து “ஸஅதே! இந்த அம்பை அவனை நோக்கி எறி!” என்றார்கள். ஸஅது (ரழி) அவர்கள் அந்த அம்பை அவனை நோக்கி எறிய, அது அவனது கழுத்தைத் தாக்கியது. அவன் மல்லாந்து விழ, அவனது ஆடையும் அகன்றது. அதைப் பார்த்து நபியவர்கள் கடைவாய் பல் தெரியுமளவுக்கு சித்துவிட்டு, “அப்பெண்மணிக்காக ஸஅது பழி தீர்த்து விட்டார். அல்லாஹ் ஸஅதின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்” என்று கூறினார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

மலைக் கணவாயில்

நபி (ஸல்) அவர்கள் கணவாயில் நல்ல அமைப்பான இடத்தை அடைந்த போது அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தங்களது கேடயத்தை எடுத்துச் சென்று அதில் தண்ணீர் நிரப்பி வந்தார்கள். அத்தண்ணீர் பெரிய குழியுடைய பாறையில் நிரம்பியிருந்த தண்ணீர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் “அது ஒரு கிணற்றிலிருந்து எடுத்து வந்த நீர்” என்கின்றனர். எது எப்படியோ அந்த தண்ணீலிருந்து நபியவர்களுக்கு விருப்பமற்ற வாடை வீசவே, நபியவர்கள் அதை குடிக்க வில்லை. தனது முகத்திலிருந்த இரத்தக் கரையைக் மட்டும் கழுவிக் கொண்டார்கள். “அல்லாஹ்வின் கோபம் அவனது நபியின் முகத்தை காயப்படுத்தியவன் மீது கடினமாகட்டும்” என்று கூறியவர்களாக தனது தலையின் மீதும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)

இந்நிகழ்ச்சி குறித்து நபித்தோழர் ‘ஸஹ்ல்’ (ரழி) நமக்குக் கூடுதல் விவரம் அளிக்கிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் காயத்தை யார் கழுவியது யார் தண்ணீர் ஊற்றியது எதைக் கொண்டு அவர்களுக்கு மருந்திடப்பட்டது என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். அதாவது, நபியவர்களின் மகளார் ஃபாத்திமா (ரழி) கழுவினார்கள். அலீ (ரழி) அவர்கள் கேடயத்திலிருந்து தண்ணீரை ஊற்றினார்கள். தண்ணீர் ஊற்றுவதால் இரத்தம் நிற்காமல் அதிகமாகிறது என்பதைப் பார்த்தவுடன் ஃபாத்திமா (ரழி) பாயின் ஒரு பகுதியை கிழித்து அதை எரித்து அந்த சாம்பலை அக்காயத்தில் வைத்தார்கள். உடனே, இரத்தம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)