பக்கம் - 302 -
அதன் பிறகு, “எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது” என்றார் அபூஸுஃப்யான். அதற்கு உமர் (ரழி) “ஒருக்காலும் சமமாக முடியாது. எங்களில் கொல்லப்பட்டவர் சுவனத்தில் இருக்கிறார். உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருக்கிறார்” என்று பதிலடி தந்தார்கள். பின்பு அபூஸுஃப்யான் “உமரே! என்னிடம் வா” என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் “உமரே! நீ அவரிடம் சென்று அவர் என்ன கூறுகிறார் என்று கேட்டு வாருங்கள்” என்றார்கள். உமர் (ரழி) அபூஸுஃப்யானிடம் வந்தவுடன் “உமரே! அல்லாஹ்வுக்காக நான் உன்னிடம் கேட்கிறேன். உண்மையில் நாங்கள் முஹம்மதைக் கொன்று விட்டோமா? இல்லையா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களை நீங்கள் கொல்ல வில்லை, அவர்கள் உமது பேச்சை இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு “இப்னு கமிஆவை விடவும் நல்லவராகவும் உண்மை சொல்பவராகவும் நான் உன்னை கருதுகிறேன்” என்று அபூ ஸுஃப்யான் கூறினார். (இந்த இப்னு கமிஆ என்பவனே நபி (ஸல்) அவர்களை தான் கொன்றுவிட்டதாக ஊளையிட்டவன்.) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

பத்ரில் சந்திக்க அழைத்தல்

மேற்கூறிய உரையாடலுக்குப் பிறகு உமர் (ரழி) திரும்பிவிட்டார்கள். அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மைதானத்தை விட்டு புறப்படும் போது “அடுத்த ஆண்டு பத்ர் மைதானத்தில் ஷஅபான் மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்” என்று முஸ்லிம்களுக்கு அறிக்கை விடுத்தார். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் ஒருவருக்கு “ஆம்! அவ்வாறே ஆகட்டும் என்று சொல்” என்றார்கள். இவ்வாறு முடிவு செய்யப்பட்டப் பிறகு அபூ ஸுஃப்யான் படையுடன் மக்கா நோக்கிப் பயணமானார். (இப்னு ஹிஷாம்)

எதிரிகளின் நிலை அறிதல்

பின்பு நபி (ஸல்) அவர்கள் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களை அனுப்பி “நீ இவர்களைப் பின்தொடர்ந்து செல் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? என்று பார்த்து வர அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்து குதிரைகளை இழுத்துச் சென்றால் அவர்கள் மக்காவிற்கு செல்கிறார்கள் என்று பொருள் அவர்கள் குதிரையில் வாகனித்து ஒட்டகத்தை இழுத்துச் சென்றால் அவர்கள் மதீனாவை நோக்கிச் செல்கிறார்கள் என்று பொருள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் மதீனா சென்றால் நான் அங்கு சென்று அவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்துக் குதிரைகளை இழுத்துச் சென்றார்கள். அவர்களது பயணம் மக்கா நோக்கியே இருந்தது.” (இப்னு ஹிஷாம்)