பக்கம் - 303 -
தியாகிகளை கண்டெடுத்தல்

எதிரிகள் சென்றதற்குப் பின் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடுவதில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதைப் பற்றி ஜைது இப்னு ஸாபித் (ரழி) இவ்வாறு கூறுகிறார்:

போர் முடிந்த பின் ஸஅது இப்னு ரபீஆவைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அனுப்பினார்கள். “நீ அவரைப் பார்த்து விட்டால் அவருக்கு எனது ஸலாம் கூறி, உனது நிலை என்னவென்று அல்லாஹ்வின் தூதர் விசாரிக்கிறார்கள்” என்று சொல்லுமாறு என்னைப் பணித்தார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர்களைத் தேடி அலைந்தேன். நான் அவரைப் பார்த்த போது அவர் இறுதி மூச்சுகளை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய உடலில் அம்பு, ஈட்டி, வாள் ஆகிய ஆயுதங்களால் ஏற்பட்ட எழுபது காயங்கள் இருந்தன. நான் அவரிடம் “ஸஅதே! அல்லாஹ்வின் தூதர் உனக்கு ஸலாம் கூறுகிறார்கள். மேலும், உமது நிலையை விசாரித்து வர என்னை அனுப்பினார்கள்” எனக் கூறினேன். அதற்கு “அல்லாஹ்வின் தூதர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக; அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனத்தின் நறுமணத்தை உணர்கிறேன் என நீர் நபியவர்களிடம் சொல் மேலும், உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று என் நண்பர்களாகிய அன்சாரிகளிடம் நீ சொல்” என்று தனது இறுதி வார்த்தைகளை கூறிய பின் உயிர் நீத்தார். (ஜாதுல் மஆது)

காயமடைந்தவர்களில் உஸைம் என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரழி) என்பவரும் ஒருவர். அவர் உயிர் பிரியும் நிலையில் இருந்தார். இதற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பலமுறை இஸ்லாமை எடுத்துக் கூறியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்தார். இவரை இந்நிலையில் பார்த்த முஸ்லிம்கள் இந்த உஸைம் ஏன் இங்கு வந்தார்! நாம் போருக்கு வரும்போது அவருக்கு நமது மார்க்கம் பிடிக்காமல் இருந்ததே! என்று கூறியவர்களாக அவரிடம் “உமது இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வந்தீரா? அல்லது இஸ்லாமை ஏற்று அதற்காக போர் புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தீரா?” என விசாரித்தனர். அதற்கவர் “இல்லை! இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால்தான் போரில் கலந்து கொண்டேன். நான் அல்லாஹ் வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புந்தேன். இப்போது எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று தனது பேச்சை முடிக்க மரணம் அவரை ஆரத் தழுவியது.

இவரது நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கூறியதற்கு நபியவர்கள் அவர் சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள்.

அபூஹுரைரா (ரழி) கூறுகிறார்: உஸைம் அல்லாஹ்விற்காக ஒரு நேரத் தொழுகை கூட தொழவில்லை (இருந்தும் நபியவர்களின் நாவினால் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.) (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

காயமடைந்தவர்களில் ‘குஜ்மான்’ என்பவரும் ஒருவர். அவர் மிகப்பெரும் வீரராய் போரில் சண்டையிட்டார். இவர் மட்டும் தனியாக ஏழு அல்லது எட்டு எதிரிகளைக் கொன்றார். இவருக்கு ஆழமான காயம் ஏற்படவே, பூமியில் விழுந்து கிடந்தார். இவரை முஸ்லிம்கள் ளஃபர் கிளையினரின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அவருக்கு முஸ்லிம்கள் நற்செய்தி கூறினர். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இன வெறிக்காகத்தான் போரிட்டேன். இனவெறி மட்டும் இருக்கவில்லையெனில் நான் போரில் கலந்திருக்க மாட்டேன்” என்றார். பின்பு காயத்தின் வேதனை கடுமையாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்றார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)