பக்கம் - 305 -
தனது சிறிய தந்தையும், பால்குடி சகோதரருமாகிய ஹம்ஜாவின் நிலையைப் பார்த்தவுடன் நபி(ஸல்) அவர்கள் மிகுந்த கவலை அடைந்தார்கள். நபியவர்கள் மாமி ஸஃபிய்யாவின் மகன் ஜுபைரிடம் “அவரைத் தடுத்து திரும்ப செல்லுமாறு கூறுங்கள்” என்றார்கள். சகோதரருக்கு ஏற்பட்ட நிலைமையை அவர் பார்க்க வேண்டாம் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். ஆனால், அவர் “நான் ஏன் பார்க்கக் கூடாது? எனது சகோதரர் சிதைக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு தெரியும். இன்ஷா அல்லாஹ்! இதற்கான நன்மையை நான் அல்லாஹவிடம் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று கூறவே, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிறகு ஸஃபிய்யா (ரழி) தனது சகோதரரை பார்த்து “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” (நாங்கள் அல்லாஹ்விற்காக உள்ளவர்கள். அவனிடமே மீளுபவர்கள்) என்று கூறி, அவரின் நன்மைக்காகவும் பாவமன்னிப்புக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இதற்குப் பின் ஹம்ஜா (ரழி) அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷு (ரழி) அவர்களுடன் நல்லடக்கம் செய்ய நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்: “ஹம்ஜா (ரழி) அவர்களுக்காக நபி (ஸல்) அழுததைப் போன்று வேறு யாருக்கும் அவர்கள் அழுது நாங்கள் பார்க்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைக் கிப்லாவின் திசையில் வைத்து அவரது ஜனஸாவுக்கு முன் நபியவர்கள் நின்றார்கள். அப்போது தனது சிறிய தந்தைக்கு ஏற்பட்டதை எண்ணி நபியவர்கள் அதிகமாக அழுதார்கள்” (முக்தஸர் ஸீரத்துர்ரஸூல்)

போரில் உயிர்நீத்த தியாகிகளின் காட்சி முஸ்லிம்களது உள்ளங்களை கசக்கி பிழிந்தது; கண்களை குளமாக்கியது; தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைப் போர்துவதற்கு கருப்பு, வெள்ளை நிறக் கோடுகள் உள்ள ஒரு போர்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அப்போர்வையில் அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன; பாதங்களை மறைத்தால் தலை தெரிந்தது. பிறகு தலை மறைக்கப்பட்டு, கால்கள் “இத்கிர்” என்ற செடியால் மூடப்பட்டன. (முஸ்னது அஹ்மது, மிஷ்காத்)

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: “முஸ்அப் (ரழி) கொல்லப்பட்டார். அவர் என்னை விட மிகக் சிறந்தவர். அவர் உடலை ஒரு சிறிய போர்வையால்தான் போர்த்தப்பட்டது. அவரது தலைப் பக்கம் துணியை இழுத்தால் கால்கள் தெரிந்தன. கால்களின் பக்கம் துணியை இழுத்தால் தலை தெரிந்தது. இந்நிலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “அப்போர்வையால் அவரது தலையை மறைத்து, அவரது காலுக்கு “இத்கிர்” என்ற செடியைப் போர்த்தி விடுங்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)