பக்கம் - 307 -
தீனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள் வழியில் சந்தித்தார்கள். அந்தப் பெண்ணின் கணவரும், சகோதரரும், தந்தையும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள். இவர்களின் மரணச் செய்தியை முஸ்லிம்கள் அவருக்குக் கூறினார்கள். ஆனால், அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டார். முஸ்லிம்கள் “இன்னாரின் தாயே! நீர் விரும்பியதைப் போன்று நபியவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் “எனக்கு அவர்களைக் காட்டுங்கள். நான் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்றார். நபியவர்களைக் கண்குளிர பார்த்தப் பிறகு “உங்களைப் பார்த்தப் பின்னால் எல்லா துன்பங்களும் எங்களுக்கு இலகுவானதே!” என்று அப்பெண்மணி கூறினார்.

வழியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி: நபி (ஸல்) அவர்களை ஸஅது இப்னு முஆதின் தாயார் சந்தித்தார்கள். ஷஅது நபியவர்களுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாராக நடந்து வந்து கொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ... எனது தாய் வருகிறார்” என்றார். நபியவர்கள் “நல்லபடியாக வரட்டும்” கூறி அவருக்காக நின்றார்கள. அவர் அருகே வந்தவுடன் அவரது மகன் அம்ர் இப்னு முஆத் (ரழி) இறந்ததற்கு ஆறுதல் கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நான் சிறியதாகவே கருதுகிறேன்” என்று கூறினார். பின்பு நபியவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்னை செய்துவிட்டு “ஸஅதின் தாயே! நீர் நற்செய்தி பெற்றுக்கொள்! உஹுதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்களுக்கு நற்செய்தி சொல்! அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் தோழர்களாக உலவுகின்றனர். அவர்கள் குடும்பத்தார்களுக்காகவும் அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்கள். இதை கேட்ட ஸஅதின் தாயார் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பொருந்திக்கொண்டோம். மகிழ்ச்சி அடைந்தோம். இதற்க்குப் பின் யார் அவர்களுக்காக அழுவார்கள்! என்று கூறி, மேலும் “அல்லாஹ்வின் தூதரே! எஞ்சியிருக்கும் அவர்களது உறவினர்களுக்காக நீங்கள் பிரார்த்னை புரியுங்கள்” என்றார். நபியவர்கள் “அல்லாஹ்வே! இவர்களின் மனக் கவலையைப் போக்குவாயாக! இவர்களது சோதனைகளை நிவர்த்தி செய்வாயாக! எஞ்சி உள்ளவர்களுக்கு அழகிய பகரத்தைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை மாலை நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.

பிறகு குடும்பத்தாரைச் சந்தித்து தனது வாளை மகள் பாத்திமாவிடம் கொடுத்து “இதிலிருந்து இரத்தத்தைக் கழுவி வை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது எனக்கு இன்று உண்மையாக உழைத்தது” என்றார்கள். பின்பு அலியும் தனது வாளை பாத்திமாவிடம் கொடுத்து “இதனை கழுவி இதிலிருந்து இரத்தத்தை அகற்றிவிடு. அல்லாஹ்வின் மீது ஆனையாக! இன்றைய தினம் இது எனக்கு உண்மையாக தொண்டாற்றி விட்டது” என்றார்கள். “நீ போரில் உண்மையாக தொண்டாற்றியதைப் போலவே உன்னுடன் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் மற்றும் அபூ துஜானாவும் உண்மையாக தொண்டாற்றினார்கள்” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

முஸ்லிம்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பெரும்பாலான அறிவிப்புகள் கூறுகின்றன. அதன் விவரமாவது:

முஹாஜிர்களில் 4 நபர்கள்; யூதர்களில் 1 நபர்; கஸ்ரஜ் இனத்தவர்களில் 41 நபர்கள்; அவ்ஸ் இனத்தவர்களில் 24 நபர்கள். (மொத்தம் 70 நபர்கள்)

இணைவைப்பவர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இருபத்து இரண்டு என்று கூறுகிறார். ஆனால், போர் சம்பந்தபட்ட அறிவிப்புகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது முப்பத்து ஏழு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிகிறது, உண்மையை அல்லாஹ்வே அறிவான் (இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)