பக்கம் - 308 -
மதீனாவில் அவசர நிலை

ஹிஜ்ரி 3 ஷவ்வால் 8, ஞாயிறு இரவு உஹுதிலிருந்து திரும்பிய பின் களைப்பும் அசதியும் எவ்வளவுதான் அதிகமாக இருந்தும் முஸ்லிம்கள் பாதூகாப்புடனே அன்றிரவை கழித்தனர். அதாவது, மதீனாவின் தெருக்களிலும், அதன் வாயில்களிலும் வீரர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்பிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். எத்திசையிலிருந்தும் எதிரிகள் மூலம் ஆபத்து நிகழலாம் என்று அவர்கள் சந்தேகப்பட்டதால் இவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்தனர்.

“ஹம்ராவுல்” அஸத் போர்

நபி(ஸல்) அவர்கள் நிலைமையை யோசித்தவாறே அன்றிரவைக் கழித்தார்கள். போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என குறைஷிகள் சிந்திக்கத் தொடங்கினால், அதற்காக கைசேதம் அடைந்து மதீனாவின் மீது இரண்டாவது முறை போர் தொடுக்க திரும்பி வரலாம் என்று நபியவர்கள் யோசித்தார்கள். எனவே, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்று மதீனாவின் எல்லைகளை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது:

உஹுத் போர் முடிந்து அடுத்த நாள் காலை, அதாவது ஹிஜ்ரி 3, ஷவ்வால் 8 ஞாயிற்றுக் கிழமை காலை, நபி(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்திப்பதற்கு முஸ்லிம்கள் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனக் கூறினார்கள். மேலும், உஹுத் போரில் கலந்தவர்கள்தான் தங்களுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நானும் வருகிறேன் என்றான். நபியவர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயம், களைப்பு எதையும் பொருட்படுத்தாமல் நபியவர்களின் அழைப்புக்கு “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டோம். உங்களது கட்டளையை ஏற்றுக் கொண்டோம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) எனும் தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கலந்து கொள்ளும் அனைத்து போரிலும் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், எனது தந்தை உஹுத் போருக்கு செல்லும் போது எனது சகோதரிகளின் பாதுகாப்புக்காக என்னை விட்டுச் சென்றார்கள். அதனால்தான் நான் தங்கினேன். எனவே, எனக்கு இப்போது உங்களுடன் போரில் கலந்து கொள்ள அனுமதி அளியுங்கள்” என்று கூறவே நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிலிருந்து 8 மைல்கள் தூரமுள்ள “ஹம்ராவுல் அஸத்” என்ற இடத்திற்கு வந்து முகாமிட்டார்கள். அங்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த “மஅபத் இப்னு அபூமஅபத்” என்பவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். (சிலர் அவர் இணைவைப்பவராகத்தான் இருந்தார். இருப்பினும் குஜாஆ மற்றும் ஹாஷிம் ஆகிய இரு கிளையினருக்கும் இருந்த நட்பின் காரணமாக நபியவர்களிடம் வந்தார் என்று கூறுகின்றனர். ஆக) அவர் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆனையாக! உமது தோழர்களுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ் உங்களுக்க சுகம் அளிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஏதாவது உங்களுக்கு செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீ அபூ ஸுஃப்யானிடம் சென்று அவரை எங்களை விட்டும் திருப்பிவிடு” என்றார்கள்.