பக்கம் - 31 -
5) தங்களின் விவசாயங்கள் மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அந்த சிலைகளுக்காக நேர்ச்சை செய்தனர். இதைப் பற்றி பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) “இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர்கள், குருமார்கள் ஆகிய) வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது” என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (அல்லாஹ்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். (அல்குர்ஆன் 6 : 138)

6) பஹீரா, ஸாம்பா, வஸீலா, ஹாம் என்ற பெயர்களில் தங்களின் கால்நடைகளை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டனர்.

இவற்றைப் பற்றி ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்கள் கூறுகிறார்கள்:

பஹீரா: இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் பாலை கறக்க மாட்டார்கள்.

ஸாம்பா: இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் மேல் சுமைகளை ஏற்ற மாட்டார்கள்.

வஸீலா: தொடர்ந்து இரண்டு பெண் குட்டிகள் ஈன்ற ஒட்டகங்களைத் தங்களின் சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள். இந்த ஒட்டகங்கள் வஸீலா எனப்படும்.

ஹாம்: பத்து பெண் ஒட்டகைகளுடன் உறவுகொண்ட ஆண் ஒட்டகையை சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள். அதில் எவ்வித சுமையையும் ஏற்றமாட்டார்கள். இத்தகைய ஆண் ஒட்டகத்திற்கு ஹாம் எனப்படும். (ஸஹீஹுல் புகாரி)

மேற்கூறப்பட்ட கூற்றுக்கு சற்று மாற்றமாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: தொடர்ந்து பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகத்தை சிலைகளுக்காக விட்டு விடுவார்கள். அதன் மீது எவ்விதச் சுமையையும் ஏற்றமாட்டார்கள். எவரும் அதை வாகனமாக்கி பயணிக்கவும் மாட்டார்கள். அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள். அதன் பாலை விருந்தினருக்கு மட்டுமே அளிப்பார்கள். இத்தகைய ஒட்டகத்திற்கு ‘ஸாம்பா’ என்று கூறப்படும். அதன் பிறகு இந்த ஸாம்பா ஒட்டகம் ஒரு பெண் குட்டியை ஈன்றால் அந்தக் குட்டியின் காதுகளை வெட்டிவிட்டு அதை அதன் தாயுடன் விட்டுவிடுவார்கள். அதன் மீதும் எவரும் பயணிக்க மாட்டார்கள். அதன் பாலை விருந்தினரைத் தவிர வேறு எவரும் அருந்தமாட்டார்கள். இந்தக் குட்டிக்கு ‘பஹீரா’ எனப்படும்.