பக்கம் - 311 -
இவ்வாறே எதிரிகளின் ஒற்றர்களில் ஒருவனான முஆவியா இப்னு முகீரா இப்னு அபுல் ஆஸையும் கொன்றுவிட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (இவன் பிற்காலத்தில் வந்த முஸ்லிம் மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வானின் தாய்வழி பாட்டனாவான்.)

இதன் விவரமாவது: இணைவைப்பவர்கள் உஹுத் போர் முடிந்து மக்காவிற்கு திரும்புகையில் இவன் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பார்க்க மதீனாவிற்கு வந்தான். உஸ்மான் (ரழி) நபியவர்களிடம் இவனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்படி கேட்டார்கள். நபியவர்கள் அவனுக்கு பாதுகாப்புக் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் மட்டும் தங்கவேண்டும், அதற்கு மேல் இங்கு தங்கியிருந்தால் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இஸ்லாமியப் படை மீண்டும் (அல்லது இரண்டாம் முறை) மதினாவில் இருந்து வெளியேறியதற்குப் பின் இவன் மூன்று நாட்களுக்கு மேலாகவும் மதீனாவில் தங்கியிருந்து குறைஷிகளுக்காக உளவு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்லாமியப் படை மதீனாவிற்குத் திரும்ப வருகிறது என்று தெரிந்தவுடன் அவன் மதீனாவிலிருந்து தப்பித்து ஓடினான். அவனைக் கொலை செய்து வரும்படி நபி(ஸல்) ஜைது இப்னு ஹாரிஸா, அம்மார் இப்னு யாசிர் (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பினார்கள். அவ்விருவரும் அவனைக் கொன்று வந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

ஹம்ராவுல் அஸத் என்ற இந்த போர் ஒரு தனி போரல்ல. மாறாக, உஹுத் போரின் ஒரு தொடர்ந்தான். உஹுத் போரின் ஒரு முடிவுரை என்றும் இதை நாம் சொல்லலாம்.

இதுவரை உஹுத்ப் போரின் அனைத்து விவரங்களையும் நிலைமைகளையம் நிகழ்வுகளையும் தேவையான அளவு அலசினோம். இந்த போரின் முடிவு முஸ்லிம்களுக்கு வெற்றியா தோல்வியா என்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலர் மிக நீண்ட ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். போரின் இரண்டாவது கட்டத்தில் எதிரிகளின் தாக்குதலே ஓங்கியிருந்தது. முஸ்லிம்களுக்கு உயிர் சேதம் அதிகம். முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முற்றிலும் தோற்றுவிட்டனர். போரின் அனைத்து நிலைகளும் மக்காவினருக்கே சாதகமாக அமைந்தன. இருப்பினும் இதை எல்லாம் வைத்து போரில் வெற்றி அவர்களுக்கு கிடைத்து விட்டது என்று நாம் கூறமுடியாது.

அதற்கான காரணங்கள்: எதிரிகள் முஸ்லிம்களின் ராணுவ முகாம்களை இறுதிவரை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் போரிலிருந்து பின்வாங்கவில்லை. கடினாமான சோதனையும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டிருந்தும் கூட புறமுதுகுக் காட்டாமல் தங்களது தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து வீரத்துடன் எதிர்த்தனர். முஸ்லிம்களை எதிரிகள் விரட்டியடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாவில்லை. முஸ்லிம்களிலிருந்து எவரும் எதிரிகளிடம் கைதியாகவில்லை. எதிரிகள் முஸ்லிம்களின் உடைமைகளில் எவற்றையும் கைப்பற்ற இயலவில்லை. போர்க் களத்திலிருந்து எதிரிகளே முதலில் வெளியேறினர். முஸ்லிம்கள் அங்கேயே இருந்தனர். போரில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் அந்த மைதானத்திலேயே அக்கால வழக்கப்படி தங்கியிருப்பது போன்று எதிரிகள் மைதானத்தில் தங்கியிருக்கவில்லை. மதீனாவில் நுழைந்து அங்குள்ள செல்வங்களையும் பிள்ளை குட்டிகளையும் சூறையாட அவர்களுக்குத் துணிவு பிறக்கவில்லை. போர்களத்திலிருந்து மதீனா மிக அருகாமையில் எவ்வித பாதுகாப்புமில்லாமல் காலியாக இருந்தும் கூட அவர்களுக்கு அங்கு செல்ல துணிவு பிறக்கவில்லை.