பக்கம் - 312 -
இதன் மூலம் நமக்கு உறுதியாக தெரிய வருவது என்னவெனில், முஸ்லிம்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படுத்தும் அளவுக்குண்டான ஒரு சந்தர்ப்பம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. எனினும், முஸ்லிம்களைச் சுற்றி வளைத்து, முற்றிலும் அழித்து, ஒழிக்க வேண்டும் என்ற தங்களது நேர்க்கத்தில் தோல்வியைத்தான் கண்டார்கள். முஸ்லிம்களுக்க ஏற்பட்ட இதுபோன்ற நஷ்டங்கள் பெரும்பாலான சமயங்களில் போரில் வெற்றி பெறும் படையினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தைக் கவனித்து எதிரிகளுக்கு இப்போரில் வெற்றி கிடைத்தது என்று சொல்ல முடியாது.

மேலும், அபூ ஸுஃப்யான் போர்க்களத்தை விட்டு விரைவாக திரும்பி செல்வதிலேயே குறியாக இருப்பது, போர் தொடர்ந்தால் தங்களுக்கு தோல்வியும் இழிவும் ஏற்படும் என்று அவர் பயந்து விட்டார் என்பதையே நமக்க உறுதி செய்கிறது. அடுத்ததாக ஹம்ராவுல் அஸத் போர் விஷயத்தில் அபூ ஸுஃப்யானின் நிலைமையைப் பாhக்கும் போது இது மேலும் உறுதியாகிறது.

ஆகவே, இந்த போரைப் பொறுத்த வரை இருசாராரில் ஒவ்வொருவருக்கும் ஒரளவு வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டது; இவ்வாறே இரு படையினரும் மைதானத்திலிருந்து புறமுது காட்டி ஓடவில்லை; தங்களது முகாம்களை எதிரிகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் போரிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர்.

இதைத்தான் அல்லாஹ் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறான்.

மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:104

இந்த வசனத்தில் இரு படையினரில் ஒவ்வொருவரையும் மற்றவருக்கு ஒப்பாகவே கூறுகிறான். அதாவது, அவர்களால் உங்களுக்கு எப்படி வேதனை ஏற்பட்டதோ அவ்வாறே உங்களால் அவர்களுக்கும் வேதனை ஏற்பட்டது. இதிலிருந்து இருவரின் நிலைமைகளும் ஒன்றுக்கொன்று ஒப்பாகவே இருந்தன. வெற்றியின்றியே இரு சாராரும் மைதானத்திலிருந்து திரும்பினர் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது

இப்போர் தொடர்பான முக்கியக் கட்டங்கள் ஒவ்வொன்றையும் குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. முஸ்லிம்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணங்களையும் குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. முஸ்லிம்களின் ஒரு சாராரிடம் இருந்த பலவீனங்களையும் குர்ஆன் வெளிப்படுத்தியது. இதுபோன்ற இக்கட்டான நிலைமைகளில் முஸ்லிம்களின் கடமைகள், இந்த சமுதாயம் உருவாக்கப்பட்டதன் உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம் என்பதால் மற்ற சமுதாயத்தை விட இந்த சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள், சில முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளையும் குர்ஆன் கோடிட்டது.