பக்கம் - 314 -
2) தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான் கிடைக்கும். இதில் அடங்கியிருக்கும் நுட்பமாவது: இறைதூதர்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைத்துக் கொண்டிருந்தால் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவர்களும் தங்களை அல்லாஹ்வை நம்பிககை கொண்டவர்கள் என்று பெயரளவில் சொல்லிக் கொள்வர். அதனால் உண்மையானவர் யார்? பொய்யர் யார்? என பிரித்து அறிய முடியாது. எப்போதும் இறைத் தூதர்களுக்கு தோல்வியே ஏற்பட்டு வந்தால் அவர்களைத் தூதர்களாக அனுப்பிய நோக்கமும் நிறைவேறாது. எனவே, பொய்யர்களிலிருந்து உண்மையானவர்களைப் பிரித்து விடுவதற்காக வெற்றி தோல்வி இரண்டையும் சேர்த்து வழங்குவதே சரியானது. அதாவது, நயவங்சகர்களின் நயவஞ்சகத்தனம் முஸ்லிம்களுக்கத் தெரியாமல் இருந்தது. இப்போரில் சொல்லிலும் செயலிலும் தங்களின் நயவஞ்சகத் தன்மையை அந்நயவஞ்சகர்கள் வெளிப்படுத்திய போது அவர்கள் முகத்திரை அகன்று, அவர்கள் யார்? எனத் தெளிவாகிவிட்டது. மேலும், முஸ்லிம்கள் தங்களின் இல்லங்களுக்குள் இருக்கும் எதிரிகளைத் தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து விலகி, அவர்களின் தீமையை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.

3) சில சமயங்களில் அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் உள்ளத்தின் பெருமை அகற்றப்பட்டு அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தனர். நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.

4) அல்லாஹ் சொர்க்கத்தில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பல உயர் நிலைகளையும் அந்தஸ்துகளையும் ஏற்படுத்தியிருக்கின்றான். அதை அவர்கள் வணக்க வழிபாடுகளால் அடைய முடியாதபோது பல சோதனைகளையும் சிரமங்களையும் அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் அந்த உயர் பதவிகளை அடைந்து கொள்கிறார்கள்.

5) இஸ்லாமிய போரில் உயிர் தியாகம் செய்வது என்பது இறைநேசர்களின் மிக உயர்ந்த பதவியாகும் அதை அல்லாஹ் தனது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கு வழங்கினான்.

6) அல்லாஹ் தனது எதிரிகளை அழிக்க நாடினால் அதற்காக அவர்களிடம் காரணங்களை ஏற்படுத்துகிறான். அதாவது, அவர்களின் ஓரிறை நிராகரிப்பு, அல்லாஹ்வின் நேசர்களை நோவினை செய்வது போன்றவற்றைக் காரணமாக்கி அவர்களை அழித்து விடுகிறான். மேலும், இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பகரமாக ஆக்கி மன்னித்து விடுகிறான். (ஃபதஹுல் பாரி)

அறிஞர் இப்னுல் கய்யிமும் தனது ஜாதுல் மஆது என்ற நூலில் இத்தலைப்பின் கீழ் போதுமான விவரங்களைத் தந்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் அங்கு பார்க்கலாம்.