பக்கம் - 318 -
இந்த கவிதைகளைச் செவிமடுத்தப் பின் அபூஸுஃப்யான் குபைபிடம் “உன்னை உனது குடும்பத்தாரிடம் விட்டுவிடுகிறோம். ஆனால், முஹம்மதை நாங்கள் கொன்று விடுகிறோம். இது உனக்கு விருப்பமா? என்று கேட்டார். அதற்கு “நான் எனது குடும்பத்தில் இருக்க, முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிக்கும் விதமாக அவருக்கு முள் குத்துவதை கூட நான் விரும்பமாட்டேன்” என குபைப் பதிலளித்தார். இதற்குப் பின் அவரை கழு மரத்தில் ஏற்றிக் கொன்றனர். அவர்களின் உடலை காவல் காக்க அங்கு சிலரை நியமித்தனர். ஒரு நாள் இரவில் அம்ர் இப்னு உமையா ழம்ரி என்பவர் அவரை கழு மரத்திலிருந்து இறக்கி நல்லடக்கம் செய்தார். பத்ர் போரில் குபைப் ஹாரிஸை கொன்றதால் அதற்குப் பதிலாக அவனின் மகன் உக்பா என்பவன் குபைப் அவர்களை கொன்றான்.

கொல்லப்படும் தருணத்தில் இரண்டு ரக்அத் தொழும் பழக்கத்தை முதலில் குபைப் தான் ஏற்படுத்தினார். மக்காவில் பழங்களே இல்லாமல் இருந்த காலத்தில் கைதியாக இருந்த குபைப் திராட்சைக் குலைகளைச் சாப்பிடுவதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். (ஸஹீஹுல் புகாரி)

ஜைது இப்னு தஸின்னாவை ஸஃப்வான் இப்னு உமைய்யா விலைக்க வாங்கி தனது தந்தை உமைய்யா பத்ரில் கொல்லப்பட்டதற்கு பதிலாக அவரைக் கொன்றான்.

முன்னால் கொல்லப்பட்ட ஆஸிமுடைய உடலின் ஒரு சில பகுதியையாவது எடுத்து வர குறைஷிகள் சிலரை அனுப்பினர். ஆஸிம் குறைஷிகளின் மிக மதிக்கத்தக்க ஒருவரை பத்ரில் கொன்றிந்தார். ஆஸிமை பாதுகாப்பதற்கு அல்லாஹ் தேனியைப் போன்ற சில வண்டுகளை அனுப்பி, வந்தவர்களை விரண்டோடச் செய்தான். “தான் எந்த இணைவைப்பவனையும் தொடமாட்டேன்; எந்த இணைவைப்பவனும் என்னை தொட்டுவிடக் கூடாது” என்று ஆஸிம் அல்லாஹ்விடம் வேண்டி இருந்தார். அவரின் இந்த வேண்டுதலையும் உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான். இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) “அல்லாஹ் முஃமினான (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட) அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

பிஃரு மஊனா

ரஜீஃ என்ற இடத்தில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட துக்கமான நிகழ்ச்சிக்குப் பின் அதைவிட படுபயங்கரமான, ஒரு துக்கமான சம்பவம் நடந்தது. இதையே வரலாற்றில் பிஃர் மஊனா அசம்பாவிதம் என் குறிப்பிடப்படுகிறது. அதன் சுருக்கமாவது:

ஈட்டிகளுடன் விளையாடுபவன் என்றழைக்கப்படும் அபூபரா என்ற ஆமிர் இப்னு மாலிக் என்பவன் மதீனாவில் நபி(ஸல்) அவர்களைச் சந்நித்தான். நபியவர்கள் அவனுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுத்தார்கள். அவன் அதை ஏற்கவுமில்லை, அதை மறுக்கவுமில்லை. அவன் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நஜ்து மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்க என்னுடன் உங்களது தோழர்களை அனுப்புங்கள், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றான். அதற்கு நபியவர்கள் “நஜ்துவாசிகள் எனது தோழர்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்கலாம் என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அதற்க அபூபரா “நான் அவர்களை பாதுகாப்பேன்” என்றான். எனவே, நபியவர்கள் நாற்பது தோழர்களை அனுப்பினார்கள். இது இப்னு இஸ்ஹாக் (ரஹ்) உடைய கூற்று. ஆனால் எழுபது நபர்கள் என ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ள எண்ணிக்கையே சரியானதாகும். இவர்களுக்கு ஸாயிதா குடும்பத்தைச் சேர்ந்த முன்திர் இப்னு அம்ர் என்பவரை நபியவர்கள் தலைவராக்கினார்கள். பிற்காலத்தில் இவர் “முஃனிக் லியமூத்” மரணமாக விரைந்தவர் என்று இவர் அழைக்கப்பட்டார். அதற்குக் காரணம், அவர் இந்நிகழ்ச்சியில் வீரமரணம் அடைய முதலாவதாக விரைந்தார். அனுப்பப்பட்ட தோழர்கள் அனைவரும் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களாகவும், குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர்களாவும் இருந்தனர். இவர்கள் பகலில் விறகு பொறுக்கி அதை விற்று திண்ணைத் தோழர்களுக்கு உணவு வாங்கி வருவர். இரவில் குர்ஆன் ஓதுவதும், தொழுவதுமாக தங்களது வாழ்வைக் கழித்து வந்தனர்.