பக்கம் - 322 -
நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையை யூதர்கள் ஏற்றே ஆகவேண்டி இருந்தது. மதீனாவை விட்டுச் செல்ல தேவையான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நயவஞ்சகர்ளின் தலைவன் இப்னு உபை யூதர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களது இல்லங்களில் இருந்து கொண்டு உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம். என்னுடன் இரண்டாயிரம் வீரர்கள் தயாராக உள்ளனர். முஹம்மது உங்கள் மீது போர் தொடுத்தால் அந்த வீரர்கள் உங்களுடன் சேர்ந்து கொண்டு உங்கள் உயிரைக் காக்க தங்களின் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். மேலும், குரைளா மற்றும், கத்ஃபான் கோத்திரத்தில் உள்ள உங்களது நண்பர்களும் உங்கள் உதவிக்கு வருவார்கள்” என்று கூறினான்.

இப்னு உபைபின் மேற்கூறப்பட்ட கூற்றை விவதித்து, இந்த குர்ஆன் வசனம் இறங்கியது.

(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான். அல்குர்ஆன் 59:11

மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இதனால் துணிவு பிறந்தது. எதிர்த்து போரிடுவோம் என்று முடிவு செய்தனர். நயவஞ்சகர்களின் தலைவன் கூறியதைக் கேட்டு நப்பாசை கொண்ட யூதர்களின் தலைவன் ஹை இப்னு அக்தப் நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி “நாங்கள் எங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற மாட்டோம். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துகொள்!” என்று கூறினான்.

உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும், சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை உண்டாக்கலாம்; மற்ற அரபுகள் ஒருபக்கம் தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின் அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஓரளவுக்கு தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று கடினமான விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக் காரணமாகலாம். ஆயினும், இதற்கெல்லாம் முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை. பிஃரு மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை அதிகம் தூண்டின. தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் மோசடி மற்றும் வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொணடு வந்து அதை செய்பவர்களுக்கும், செய்யத் தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்; நபி (ஸல்) அவர்களையே கொல்லத் துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஹை இப்னு அக்தப் கூறிய பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ (ரழி) படையின் கொடியை ஏந்தியிருக்க நபியவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள்.