பக்கம் - 358 -
பத்ர் போருக்குப் பின் இவன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாயளவில் தான் ஏற்றுக்கொண்டான் மனப்பூர்மாக அல்ல. ஆகவே, இவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரியாகவே இருந்து வந்தான். இஸ்லாமியச் சமுதாயத்தை பிரிப்பதற்கும், இஸ்லாமை பலவீனப்படுத்துவதற்கும் எப்போதும் சிந்தனை செய்து வந்தான். இஸ்லாமின் எதிரிகளுடன் தோழமை கொண்டிருந்தான். கைனுகா யூதர்களின் விஷயத்தில் இவன் குறுக்கிட்டது போன்றே உஹுத் போரில் இவன் செய்த மோசடி, முஸ்லிம்களைப் பிரிப்பதற்காக செய்த சூழ்ச்சி, முஸ்லிம்களின் அணிகளுக்கு மத்தியில் அவன் ஏற்படுத்திய குழப்பங்கள், சலசலப்புகள் பற்றி இதற்கு முன்பு நாம் கூறியிருக்கின்றோம்.

இவன் இஸ்லாமை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டபின் முஸ்லிம்களை மிக அதிகமாக ஏமாற்றி, அவர்களுக்கு வஞ்சகம் செய்து வந்தான். நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ பேருரைக்காக மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் இவன் எழுந்து “இவர்தான் அல்லாஹ்வின் தூதர்! இதோ... இவர் உங்களுக்கு மத்தியில் இருக்கிறார் இவர் மூலம் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் வழங்கியிருக்கின்றான் இவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் இவருக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் இவன் பேச்சை செவி தாழ்த்தி கேளுங்கள் இவருக்கு கீழ்ப்படியுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்து கொள்வான். அதற்குப் பின் நபி (ஸல்) எழுந்து பிரசங்கம் செய்வார்கள்.

இந்த நயவஞ்சகனின் வெட்கங்கெட்ட தன்மைக்கு இதை உதாரணமாகக் கூறலாம்: இவன் உஹுத் போரில் செய்த மோசடிகள் அனைவருக்கும் தெரிந்ததே. நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியப் பின் ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று பிரசங்கத்திற்காக எழுந்தார்கள். அப்போது அவன், தான் வழக்கமாக சொல்லி வந்ததைச் சொல்வதற்காக எழுந்தான். ஆனால், முஸ்லிம்கள் அவனது ஆடையைப் பிடித்திழுத்து “அல்லாஹ்வின் எதிரியே! உட்காரடா... உனக்கு இதைக் கூறுவதற்கு எந்த தகுதியுமில்லை. நீ செய்ய வேண்டிய அழிச்சாட்டியங்களை எல்லாம் செய்து விட்டாய்” என்று கூறினார்கள். அதற்கவன் “நான் என்ன கெட்டதையா கூறினேன்! அவரது காரியத்தில் அவரைப் பலப்படுத்தவே நான் எழுந்தேன்” என்று கூறியவனாக மக்களின் பிடரிகளை தாண்டிக் கொண்டு பள்ளியைவிட்டு வெளியேறினான். பள்ளியின் வாயிலில் அன்சாரி ஒருவர் அவனைப் பார்த்து “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நீ நபியவர்களிடம் திரும்பிச் செல். அவர்கள் உனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவார்கள்” என்றார். அதற்கவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனக்காக பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்று எனக்கு எவ்வித ஆசையுமில்லை” என்றான். (இப்னு ஹிஷாம்)

மேலும், நளீர் இன யூதர்களுடன் அவன் தொடர்பு வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக எப்போதும் சதித்திட்டம் தீட்டி வந்தான். இவன் நளீர் இன யூதர்களுக்கு கூறியதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு விவரிக்கிறான்:

(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களிலுள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி “நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறி விடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு எதிராக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் வழிப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்” என்றும் கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான். (அல்குர்ஆன் 59:11)