பக்கம் - 36 -
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7 : 31)

அதேநேரத்தில் யாரேனும் ஓர்ஆண் அல்லது பெண் தங்களை மேன்மையானவர்களாக கருதி இரவல் ஆடை வாங்காமல் தாங்கள் கொண்டு வந்த ஆடையிலேயே வலம் வந்துவிட்டால் அது முடிந்தவுடன் அந்த ஆடையை எறிந்து விடுவார்கள். வேறு யாரும் அதனைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

5) அவர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டு தலைவாசல் வழியாக நுழையாமல் பின்பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியாகவே போவார்கள், வருவார்கள். இந்த மூடத்தனமான செயலை மிகவும் உயர்ந்த நற்செயல் என அவர்கள் கருதினார்கள். இதை கண்டித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

(நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 2 : 189) (ஸஹீஹுல் புகாரி)

இணைவைத்தல், சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவையே அரபிய தீபகற்பத்தில் பரவி இருந்தன. இது தவிர யூத, கிருஸ்துவ, மஜூஸி, ஸாபி போன்ற மதங்கள் அரபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்டன.

இரண்டு கட்டங்களில் யூதர்கள் அரபிய தீபகற்பத்தில் ஊடுருவினர்.

1) ஃபலஸ்தீனத்தை ‘புக்து நஸ்ரு’ என்ற மன்னன் கி.மு. 587 ஆம் ஆண்டு கைப்பற்றி அங்கு வாழ்ந்த யூதர்களை நெருக்கடிக்குள்ளாக்கினான். யூதர்களின் நகரங்களை அழித்து அவர்களது வசிப்பிடங்களை நாசமாக்கினான். மேலும், அவர்களில் அதிகமானோரை பாபில் நகருக்கு கைதிகளாக்கிக் கொண்டு சென்றான். இதனால் அவர்களில் ஒரு பிரிவினர் ஃபலஸ்தீனத்தை துறந்து ஹிஜாஸின் வட பகுதிகளில் குடியேறினர்.

2) கி.பி. 70 ஆம் ஆண்டில் ‘டைடஸ்’ என்ற ரோமானிய மன்னன் ஃபலஸ்தீனை கைப்பற்றினான். அவன் யூதர்களையும் அவர்களது வசிப்பிடங்களையும் அழித்தொழித்தான். அதன் விளைவாக ஏராளமான யூதர்கள் ஹி ஜாஸ் பகுதியிலுள்ள மதீனா, கைபர், தீமா ஆகிய நகரங்களில் குடியேறினர். அங்கு தங்களுக்கென சிறந்த வசிப்பிடங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த யூதர்களால் அரபியர்களிடையே யூத மதம் பரவ ஆரம்பித்தது. இஸ்லாமின் வருகைக்கு முன்பும் இஸ்லாமுடைய வருகையின் ஆரம்ப காலக்கட்டத்திலும் நடந்த அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் யூத மதத்திற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் இருந்தது. இஸ்லாம் தோன்றியபோது இருபதுக்கும் மேற்பட்ட யூத கோத்திரங்கள் அரபிய தீபகற்பத்தில் இருந்தன. அவற்றில் பிரபலமானவை கைபர், நழீர், முஸ்தலக், குரைளா, கைனுகாஃ ஆகிய கோத்திரங்களாகும். (ஸஹீஹுல் புகாரி, வஃபாவுல் வஃபா)