பக்கம் - 360 -
இது விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்சகர்கள் புனைந்தனர். அதாவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காகத் தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக் கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகின்றான்:

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

இதுவரை நாம் கூறியது முஸ்தலக் போருக்கு முன்னர் நயவஞ்சகர்கள் புரிந்த தில்லு முல்லுகளின் சுருக்கமான ஒரு கண்ணோட்டமாகும். இவை அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் மிகப் பொறுமையுடனும், நளினத்துடனும், நுட்பத்துடனும் எதிர்கொண்டு சகித்து வந்தார்கள். மற்ற முஸ்லிம்கள் அந்நயவஞ்சகர்களின் தீங்கிலிருந்து தங்களைத் தற்காத்து வந்தனர் அல்லது அவர்களின் தீங்குகளைச் சகித்து வந்தனர். ஏனெனில், இந்நயவஞ்சகர்கள் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை இழிவுக்குள்ளாகிறார்கள் அவர்களது உள்ளத்தின் இரகசியங்களைக் குர்ஆனில் வெளிப் படுத்தப்பட்டு கேவலத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காண வில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல்குர்ஆன் 9:126)

முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்...

முஸ்தலக் போரில் நயவஞ்சகர்களும் முஸ்லிம்களுடன் கிளம்பி இருந்ததால் அல்லாஹ் திருமறையிலே சுட்டிக்காட்டும்...

அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:47)

இக்கூற்றுக்கு ஒப்பாகவே அவர்கள் நடந்து கொண்டனர். தீங்கு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் முஸ்லிம்களின் அணியில் பெரும் பிணக்கையும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மிக இழிவான பழியையும் உருவாக்கினர். அதன் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.