பக்கம் - 364 -
முஸ்லிம்கள் மதீனா திரும்பியதற்குப் பின் கதையை புனைவதில் பாவிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். நபியவர்களோ எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பு வருவது தாமதமாகிவிடவே, ஆயிஷாவைப் பிரிந்து விடும் விஷயத்தில் தங்களது தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள். ஆயிஷா (ரழி) பிரிந்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ள அலீ (ரழி) மறைமுகமாக ஆலோசனை சொன்னார்கள். உஸாமா இப்னு ஜைதும் (ரழி) மற்ற தோழர்களும் “எதிரிகளின் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம். ஆயிஷாவைப் பிரிந்து விடாதீர்கள்” என்று ஆலோசனைக் கூறினார்கள்.

நபி (ஸல்) மிம்பன் மீது ஏறி அப்துல்லாஹ் இப்னு உபையிடம் தங்களது மன வருத்தத்தைத் தெரிவித்தார்கள். இது அவ்ஸ் கிளையினரின் தலைவர் உஸைது இப்னு ஹுளைருக்குக் கோபத்தை மூட்டியது. அவர் அப்துல்லாஹ் இப்னு உபையைக் கொல்ல வேண்டும் என்ற தனது கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், இப்னு உபையின் கிளையைச் சேர்ந்த கஸ்ரஜினன் தலைவர் ஸஅது இப்னு உபாதாவிற்கு தனது இனத்தவரை இவ்வாறு கூறியது வெறுப்பை மூட்டியது. இதனால் இரு கிளையினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவ்விரு கிளையினரையும் சமாதானப்படுத்தினார்கள்.

போரிலிருந்து திரும்பியவுடன் ஒரு மாத காலமாக ஆயிஷா (ரழி) உடல் நலம் குன்றியிருந்தார். தன்னைப் பற்றி பேசப்பட்டு வந்த பொய்யான கதையை ஆயிஷா (ரழி) அறிந்திருக்கவில்லை. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எந்தளவு நபியவர்கள் பரிவு காட்டு வார்களோ அந்தப் பரிவை நபி (ஸல்) அவர்களிடம் இப்போது அன்னை ஆயிஷா (ரழி) பார்க்கவில்லை.

சற்று உடல் நலம் தேறியது. ஓர் இரவு ‘உம்மு மிஸ்தஹ்’ என்ற தோழியுடன் சுயதேவையை நிறைவேற்றுவதற்காக இரவில் வெளியில் சென்றார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி மதீனாவில் உலா வரும் வதந்திகளில் உம்மு மிஸ்தஹுடைய மகனும் பங்கு பெற்றுள்ளார். இந்தக் கவலையும் சிந்தனையும் உம்மு மிஸ்தஹை அதிகம் பாதிப்படைய வைத்தது. ஆயிஷா (ரழி) அவர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது தனது மகனுக்கு அவதூறு விஷயத்தில் தொடர்புள்ளது என்று எவ்வாறு அவர்களிடம் கூறுவது? இதே குழப்பத்தில் மனம் உழன்று கொண்டிருக்கும் போது உம்மு மிஸ்தஹ் (ரழி) தன்னுடைய ஆடையால் தடுக்கிக் கீழே விழுந்தார், அப்போது தன்னை அறியாமலேயே அவர்கள் தனது மகனைத் திட்டினார்கள். “நீ கீழே விழுந்ததற்கு உன் மகனை ஏன் திட்டுகிறாய்?” என்று ஆயிஷா (ரழி) வினவிய போது, உம்மு மிஸ்தஹ் (ரழி) ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி மக்களிடையே பரப்பப்பட்ட அவதூறுகளைக் கூறினார்.

உம்மு மிஸ்தஹ் (ரழி) செய்தியைக் கூறிய உடனேயே, ஆயிஷா (ரழி) வீட்டிற்குத் திரும்பினார்கள். தனது பெற்றோர்களிடம் சென்று செய்தியை உறுதியாக தெரிந்துவர நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அனுமதி பெற்று, பெற்றோர்களைச் சந்தித்து உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொண்டவுடன் ஆயிஷா (ரழி) வேதனை பொறுக்க முடியாமல் அழுதார்கள். இரண்டு இரவும் ஒரு பகலும் தூங்காமல் அழுது கொண்டேயிருந்தார்கள். அவர்களது இந்த அழுகை அன்னாரின் ஈரலைப் பிளந்துவிடுமளவுக்கு இருந்தது.