பக்கம் - 366 -
ஒரு மாதத்திற்குப் பின் இந்தப் பிரச்சனையால் உண்டான சந்தேகம் மற்றும் குழப்பங்கள் மதீனாவை விட்டு முற்றிலுமாக அகன்றன. நயவஞ்சகர்களின் தலைவன் இப்னு உபை பெரும் கேவலமடைந்தான். இந்த இழிவுக்குப் பின் சமூகத்தில் அவன் தலையை நிமிர்த்த முடியவில்லை.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: இச்சம்பவத்திற்குப் பின் இப்னு உபை ஏதாவது பேசினால் அவனது கூட்டத்தினரே அவனைக் கண்டித்து அடக்கி விடுவார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் “உமரே நீர் என்ன கருதுகிறீர்? நீர் என்னிடம் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அன்றே நான் இவனைக் கொலை செய்திருந்தால் அவனது கூட்டத்தினர் என் மீது மிகுந்த கோபம் அடைந்திருப்பார்கள். ஆனால், இன்று அவனது கூட்டத்தனரிடம் அவனைக் கொலை செய்து விடுங்கள் என்று நான் கூறினால் அவர்கள் அவனைக் கொலை செய்து விடுவார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேட்ட உமர் (ரழி) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதருடைய செயல் எனது செயலைவிட நேர்த்திமிக்கது என்பதை இப்போது நான் உறுதியாக தெரிந்து கொண்டேன்” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)சற்று முன் கூறப்பட்ட முரைஸீ போருக்குப் பின் அனுப்பப்பட்ட குழுக்கள் மற்றும் படைப் பிரிவுகளைப் பற்றி இங்கு நாம் கூறயிருக்கிறோம்:

1) ‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘தவ்மதுல் ஜன்தல்’ எனும் பகுதியில் இருக்கும் கல்பு கிளையினரின் ஊர்களுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுடன் ஒரு படைப்பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அனுப்பும் போது அவரை நபி (ஸல்) தனக்கு முன் அமர வைத்து, தனது கரத்தால் அவருக்குத் தலைப்பாகை கட்டிவிட்டார்கள். மேலும், போரில் மிக அழகிய முறைகளைக் கையாள வேண்டும் என்று உபதேசம் செய்ததுடன் “அவர்கள் உமக்கு கீழ்ப்படிந்து விட்டால் அவர்களுடைய தலைவன் மகளை நீர் திருமணம் செய்துகொள்!” என்றும் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி அந்தக் கூட்டத்தினருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் ‘துமாழிர் பின்த் அஸ்பக்’ என்ற பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) திருமணம் செய்து கொண்டார்கள். இப்பெண்மணி பிரபல்யமான நபித்தோழர் அபூஸலமாவின் தாயாராவார். இப்பெண்மணியின் தந்தைதான் கல்பு இனத்தவன் தலைவராக இருந்தார்.