பக்கம் - 368 -
இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதத்தில் நடந்தது. அப்போது நபி (ஸல்) அந்த உரைனாவினர் மீது சாபமிட்டார்கள். “அல்லாஹ்வே! அவர்களின் பாதையை அவர்களுக்கு மறைத்துவிடு, தண்ணீர் துருத்தியின் வாயை விட அவர்களுக்குப் பாதையை மிக நெருக்கடியாக ஆக்கிவிடு!” என்று பிரார்த்தித்தார்கள். பாதையை அல்லாஹ் அவர்களுக்கு மறைத்து விட்டான். எனவே, அவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் இலகுவாகப் பிடித்தனர். அவர்களின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு, கண்களுக்குச் சூடு வைக்கப்பட்டது. அவர்கள் எவ்வாறு ஒட்டக இடையர்களைக் கொலை செய்தார்களோ அவ்வாறே அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு இத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின் அவர்களை மதீனாவின் வெளியில் விவசாயக் களத்தில் இதே நிலையில் விடப்பட்டது. அனைவரும் செத்து மடிந்தனர். (ஜாதுல் மஆது)

இந்நிகழ்ச்சி ஸஹீஹுல் புகாரியில் விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட சம்பவங்களுடன் வரலாற்று ஆசிரியர்கள் மற்றொரு படைப் பிரிவின் நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றனர். அதாவது: அபூஸுஃப்யான் தன்னை கொலை செய்ய ஒரு கிராம அரபியை அனுப்பியிருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் நபியவர்கள் அம்ரு இப்னு உமைய்யா ழம் மற்றும் ஸலமா இப்னு அபூஸலமா ஆகிய இருத்தோழர்களையும் அபூ ஸுஃப்யானைக் கொலை செய்ய அனுப்பினார்கள். ஆனால், இந்த நோக்கத்தில் எவரும் வெற்றியடையவில்லை. இந்நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் நடந்தது.

மேற்கூறப்பட்ட அனைத்து சிறிய பெரிய சம்பவங்கள், அகழ் மற்றும் குறைளா போர்களுக்குப் பின் நடைபெற்றவையாகும். இவற்றுள் எதிலும் கடுமையானச் சண்டை ஏதும் ஏற்படவில்லை. சில சம்பவங்களில் சிறிய மோதல்கள் மட்டும் ஏற்பட்டன. சுற்று வட்டார நிலைமைகளை அறிந்து வருவது அல்லது அடங்காமல் இருந்த கிராம அரபிகளையும் எதிரிகளையும் அச்சுறுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவது ஆகியவையே அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளின் நோக்கமாக இருந்தது.

நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் பொழுது நமக்குத் தெரியவருவது என்னவெனில், அகழ் போருக்குப் பின்பு முஸ்லிம்களின் நிலைமை முன்னேற்றம் கண்டது. இஸ்லாமுடைய எதிரிகளின் நிலைமைகளும் அவர்களின் ஆற்றல்களும் சரியத் தொடங்கின. இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க வேண்டும், அதன் பலத்தைக் குறைக்க வேண்டும் என்ற கொஞ்ச நஞ்ச ஆசையும் இறைமறுப்பாளர்களுக்கு எஞ்சியிருக்கவில்லை. ஆகவே, இஸ்லாமின் ஆற்றலை ஏற்று அதற்குப் பணிந்து, அரபு தீபகற்பத்தில் இஸ்லாம் நிலைபெறுவதை ஏற்றுக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இஸ்லாமின் இந்த முன்னேற்றத்தை ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.