பக்கம் - 369 -


உம்ரா

அரபு தீபகற்பத்தில் நிலைமைகள் பெருமளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறின. சிறிது சிறிதாக மாபெரும் வெற்றிக்கான முன் அறிவிப்புகளும், இஸ்லாமிய அழைப்புப் பணி முழுமையாக வெற்றியடைவதற்கான அடையாளங்களும் தோன்றின. மக்காவிலுள்ள கண்ணியமிக்க பள்ளி வாசலில் (அல் மஸ்ஜிதுல் ஹராமில்) கடந்த ஆறு ஆண்டுகளாக இறைவணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் இணைவைப்பவர்களால் முஸ்லிம்கள் தடுக்கப்பட்டு வந்தனர் என்பது தெரிந்ததே. இப்போது அப்பள்ளியில் வணக்க வழிபாடுகள் நிறைவேற்றுவதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை இணைவைப்பவர்கள ஏற்றுக் கொள்ள வைப்பதற்குரிய முன்னேற்பாடுகள் தொடங்கின.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதாவது, “நபியவர்களும் அவர்களது தோழர்களும் புனித பள்ளிக்குள் நுழைகிறார்கள். கஅபாவின் சாவியை நபி (ஸல்) பெறுகிறார்கள். அனைவரும் கஅபாவை வலம் வந்த பின் தங்களது உம்ராவை நிறைவு செய்கிறார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். சிலர் முடியைக் குறைத்துக் கொள்கின்றனர்.” தான் கண்ட இந்தக் கனவை நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கூறியபோது அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதே ஆண்டு அனைவரும் மக்காவிற்குச் செல்வோம் என எண்ணினர். இதற்குப் பின் நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் தான் உம்ராவிற்குச் செல்ல இருப்பதாகவும், நீங்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறினார்கள்.

முஸ்லிம்களே புறப்படுங்கள்

நபி (ஸல்) மதீனாவில் உள்ள முஸ்லிம்களையும், சுற்று வட்டார முஸ்லிம் கிராமவாசிகளையும் தன்னுடன் புறப்படுமாறு கூறினார்கள். ஆனால், பெரும்பாலான கிராமவாசிகள் புறப்படுவதில் தயக்கம் காட்டினார்கள். நபி (ஸல்) தங்களது ஆடைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டதுடன் பயணத்திற்காகக் ‘கஸ்வா’ என்ற தங்களது ஒட்டகத்தையும் தயார் செய்து கொண்டார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் அல்லது நுமைலா லைஸி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். நபியவர்களுடன் அவர்களின் மனைவி உம்மு ஸலமாவும் 1400 அல்லது 1500 தோழர்களும் புறப்பட்டனர். ஒரு பயணிக்கு அவசியமான ஆயுதத்தைத் தவிர வேறு எந்த ஆயுதங்களையும் நபியவர்கள் தங்களுடன் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், எடுத்துக் கொண்ட ஆயுதங்களையும் வெளியில் தெரியாமல் அவைகளின் உறைக்குள் மறைத்து வைத்திருந்தார்கள்.

மக்காவை நோக்கி

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் ‘துல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் தாங்கள் அழைத்து வந்த குர்பானி பிராணிகளுக்கு மாலையிட்டு அடையாளமிட்டார்கள். தாங்களும் உம்ராவிற்காக ஆடை அணிந்து கொண்டார்கள். எவரும் தங்களிடம் போர் செய்யக் கூடாது தானும் போருக்காகப் புறப்படவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்கினார்கள்.