பக்கம் - 371 -
மாற்று நடவடிக்கை

தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். மலைகளுக்கிடையில் கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடான பாதை வழியே, அதாவது வலப்பக்கம் ‘ஹம்ஸ்’ என்ற ஊரின் புறவழியான ‘ஸனிய்யத்துல் முரார்’ வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்று கொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித் குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்காவிற்கு விரைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து ‘ஸனிய்யத்துல் முரார்’ என்ற இடத்தை அடைந்தவுடன் அவர்களது வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது. மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம் பிடித்தது. அப்போது நபி (ஸல்) “எனது ஒட்டகம் ‘கஸ்வா’ முரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகைய குணமுடையதுமல்ல! என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும் தடுத்து விட்டான் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ் மேன்மைபடுத்தியவற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்” என்று கூறிவிட்டு தனது ஒட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது. நபியவர்கள் தனது பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள ‘ஸமது’ என்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள். அங்கு மக்களின் தேவையை விட குறைவாகவே தண்ணீர் இருந்தது. ஆனால், மக்கள் அங்கு வந்து இறங்கியவுடனேயே தண்ணீரை எல்லாம் இறைத்து காலி செய்து விட்டார்கள். தங்களின் தாகத்தை நபியவர்களிடம் முறையிட்டனர். நபியவர்கள் தங்களது அம்பு கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அந்தக் கிணற்றில் வைக்கும்படி கூறினார்கள். அவ்வாறே வைக்கப்பட்டவுடன் மக்களின் தாகம் தீரும் அளவுக்கு அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது.

நடுவர் வருகிறார்

நபியவர்கள் அங்கு தங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் ‘புதைல் இப்னு வர்கா அல் குஜாயீ’ என்ற முக்கியப் பிரமுகர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். திஹாமா மாநிலத்தைச் சேர்ந்த மக்களில் குஜாஆ கிளையினர்தான் நபி (ஸல்) அவர்களின் இரகசியத்திற்கு உரித்தான மக்களாகவும், நன்மையை நாடுபவர்களாகவும் இருந்தனர். “கஅப் இப்னு லுவை ஹுதைபிய்யாவின் கிணறுகள் உள்ள ஓர் இடத்தில் வாலிப ஒட்டகங்களுடன் தங்கியிருக்கிறார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களுடன் போர் புரிய வேண்டும் நீங்கள் கஅபாவிற்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றனர். நான் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று புதைல் கூறினார்.

நபியவர்கள் அவரிடம்: “நாங்கள் எவரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். நிச்சயமாகக் குறைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து தருவேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்குமிடையில் குறுக்கிடக் கூடாது. (அதாவது, நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது). விரும்பினால் மற்ற மக்களைப் போல அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல், ‘போர்தான் புரிவோம்!’ என்று பிடிவாதம் பிடித்தால், எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இம்மார்க்கத்திற்காக எனது கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இம்மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களிடம் போர் புவேன்” என்று கூறினார்கள்.