பக்கம் - 382 -
மக்காவில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒருவரால் மதீனாவிற்கு வர இயலாது என்றாலும் அல்லாஹ்வின் பூமி விசாலமானது என்பதால் அவர் வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மதீனாவாசிகள் இஸ்லாமைப் பற்றி தெரியாமல் இருந்த போதே முஸ்லிம்கள் ஹபஷா சென்று தங்கவில்லையா? இதைத்தான் நபியவர்கள் “யார் அவர்களிலிருந்து நம்மிடம் வருகிறாரோ, அதாவது இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் வெகு விரைவில் நல்ல சூழ்நிலையையும் கஷ்டத்திலிருந்து விடுதலையும் தருவான்” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இதுபோன்ற தற்காப்பு உடன்படிக்கையைக் குறைஷிகள் ஏற்படுத்திக் கொண்டது (மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்தவரை திருப்பி அனுப்பிவிட வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்தவர் திரும்பி அனுப்பப்பட மாட்டார் என்பது) வெளிப்படையாக பார்க்கும் போது குறைஷிகளுக்கு இது கண்ணியமானதாகத் தெரிந்தாலும், உண்மையில் குறைஷிகள் எவ்வளவு நடுக்கத்திலும், சோர்விலும் தங்களது சிலை வணக்கத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சத்திலும் இருக்கின்றனர் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

தங்களின் மதக் கட்டமைப்பு அழியும் அபாயத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவேதான், இதுபோன்ற ஒரு தற்காப்பு அம்சத்தை தங்கள் உடன்படிக்கையில் இடம்பெறச் செய்தனர். முஸ்லிம்களிடமிருந்து குறைஷிகளிடம் சேர்ந்து கொண்டவரை திருப்பி கேட்க மாட்டோம் என்று நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையாக கூறியது தனது மார்க்கத்தின் மீதும், அதை பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும். எனவே, இதுபோன்ற நிபந்தனைகளைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் சிறிதளவும் அஞ்சவில்லை.

முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

மேற்கூறப்பட்ட இவைதான் இந்த சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்களாகும். எனினும், வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களையும் துக்கமும், கவலையும் கடுமையாக ஆட்கொண்டது. நபியவர்கள் “அல்லாஹ்வின் இல்லத்திற்குச் செல்வோம். அங்கு சென்று தவாஃப் செய்வோம்” என்று கூறினார்கள். ஆனால், அங்கு சென்று தவாஃப் செய்யாமலேயே எப்படி நம்மைத் திருப்பி அழைத்துச் செல்லலாம் என்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம்: இவர்கள் (முஹம்மது) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். மேலும் சத்தியத்தில் இருக்கிறார்கள். அல்லாஹ் தனது மார்க்கத்தை உயர்வாக்குவான் என்று வாக்கும் அளித்துள்ளான். அப்படியிருக்க ஏன் குறைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? ஏன் சமாதானத்தில் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்?

இந்த இரண்டு வெளிப்படையான காரணங்கள் பல சந்தேகங்களையும், பல எண்ணங்களையும், பல குழப்பங்களையும் கிளப்பின. இதனால் முஸ்லிம்களின் உணர்வுகள் காயமடைந்தன. சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்களைச் சிந்திக்க விடாமல் கவலையும் துக்கமும்தான் முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்தது. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள்தான் அதிகக் கவலை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து பேசினார்கள். இதோ... அவர்களது உரையாடல்: