பக்கம் - 388 -
இக்கடிதத்தை டாக்டர் அவர்கள் குறிப்பிட்டதற்குப் பின் இதுதான் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நஜ்ஜாஷி மன்னருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய வாசகம் என்று உறுதியுடன் கூறுகிறார்கள். ஆனால், நாம் கூறுவது என்னவெனில், ஆதாரங்களை ஆராய்ந்த பின் இது நபி (ஸல்) அவர்களின் கடிதம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்புதான் எழுதப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மாறாக, இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி அறிவிக்கும் கடிதமே ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நபி (ஸல்) கிறிஸ்தவ அரசர்களுக்கும், கவர்னர்களுக்கும் எழுதியனுப்பிய கடிதங்களுக்கு ஒப்பாக இருக்கிறது. ஏனெனில், பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு நபி (ஸல்) எழுதும் கடிதத்தில் “வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக!... (அல்குர்ஆன் 3:64)

என்ற வசனத்தை குறிப்பிடுவார்கள். அந்த வசனம் இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் கடிதத்தில்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், அக்கடிதத்தில் நஜ்ஜாஷி மன்னன் பெயர் ‘அஸ்ஹமா’ என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹமீதுல்லாஹ் குறிப்பிட்ட கடிதத்தைப் பற்றி ஆராயும் போது, அஸ்ஹமாவின் மரணத்திற்குப் பின் அவருடைய பிரதிநிதியாக பதவியேற்றவருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய கடிதமாக இருக்கலாம் என்பது எனது கருத்து. எனவேதான், நபியவர்கள் இக்கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லை.

இவ்வாறு நான் விமர்சிப்பதற்கு வெளிப்படையான, உறுதியான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. என்றாலும் இக்கடிதங்களையும் அதன் கருத்துகளையும் ஆராயும் போது நான் கூறும் இவ்விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில், டாக்டர் ஹமீதுல்லாஹ் “இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கடிதத்தை நபியவர்கள் நஜ்ஜாஷி மன்னர் அஸ்ஹமா மரணித்த பின் அவரது பிரதிநிதிக்கு எழுதினார்கள்” என்று கூறுகிறார். ஆனால், இக்கடிதத்தில் அஸ்ஹமாவின் பெயர் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவரிடமுள்ள கடிதத்திலோ அப்பெயர் கூறப்படவில்லை. அல்லாஹ்தான் உண்மையாக நன்கறிந்தவன்.

நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.