பக்கம் - 393 -
4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

நபியவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) ‘ர்கலுக்கு’ எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி (ரஹ்) ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)

இக்கடிதத்தை எடுத்துச் செல்ல திஹ்யா இப்னு கலீஃபா அல்கல்பி என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். அவரிடம் “நீங்கள் இதை புஸ்ராவின் கவர்னரிடம் கொடுங்கள், கவர்னர் அக்கடிதத்தை மன்னர் கைஸரிடம் கொடுக்கட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இது தொடர்பாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:

அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதை பிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)

அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.

மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?

அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.

மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.

(தனது மொழிபெயர்ப்பாளரிடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.