பக்கம் - 395 -
அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:

உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். “அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்” என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார். அடுத்து, உன்னிடம் “இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?” எனக் கேட்டேன், “இல்லை” என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.

அடுத்து உன்னிடம் “இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?” எனக் கேட்டேன். நீ “இல்லை” என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோன் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். அடுத்து உன்னிடம் “(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?” எனக் கேட்டேன். நீ “இல்லை” என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா”? என்று உன்னிடம் கேட்டேன் “அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்” என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.

அடுத்து உன்னிடம் “அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா” என்று கேட்டேன். “அதிகரிக்கின்றனர்” என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து உன்னிடம் “அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா” என்று கேட்டேன். நீ “இல்லை” என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள். அடுத்து உன்னிடம் “அவர் மோசடி செய்ததுண்டா”? என்று கேட்டேன். நீ “இல்லை” என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.

அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்” என்று கூறினாய். “நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்” என்றார். பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். முன்னாள் நாம் கண்ட அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.