பக்கம் - 398 -
இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி (ஸல்) ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸலீத் (ரழி) இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர் ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் (ரழி) அவருக்கு அக்கடிதத்தைப் படித்துக் காட்டினார். அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில் ஒன்றை எழுதினார். அதில், “நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது - பொதுவாக அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால் நான் உம்மைப் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.

இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து ‘ஹஜர்’ என்ற இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.

இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு “அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும் நாசமாகி விட்டது” என்றார்கள். நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது ‘ஹவ்தா’ இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். அப்போது நபி (ஸல்), “நிச்சயமாக யமாமாவில் தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்” என்றார்கள். ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீரும் உமது தோழர்களும்” என்றார்கள். பின்னாளில் நபி (ஸல்) கூறியவாறே நடந்தது.

7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்

இவர் பெயர் ‘ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி’ ஆகும். நபி (ஸல்) இவருக்கு எழுதிய கடிதமாவது:

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர் வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.”

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு “என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்” என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபியவர்கள் மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப் பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும் கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.