பக்கம் - 400 -
அப்து: அம்ரே! நீர் சொல்வதை நன்கு யோசித்துச் சொல். ஏனெனில் பொய்யை விட ஒருவனை கேவலப்படுத்தக் கூடிய குணம் எதுவும் இருக்க முடியாது.

அம்ர்: நான் பொய் கூறவுமில்லை. அதை எங்களின் மார்க்கம் ஆகுமானதாக கருதவுமில்லை.

அப்து: அநேகமாக ஹிர்கலுக்கு நஜ்ஜாஷி இஸ்லாமானது தெரிந்திருக்காது.

அம்ர்: இல்லை. ஹிர்கலுக்குத் தெரியும்.

அப்து: அது ஹிர்கலுக்கு தெரியுமென்பதை நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?

அம்ர்: அதாவது, நஜ்ஜாஷி இதற்கு முன் ஹிர்கலுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஆனால், அவர் எப்போது இஸ்லாமை ஏற்று முஹம்மதை உண்மைப்படுத்தினாரோ அப்போது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிர்கல் என்னிடம் ஒரு திர்ஹமைக் கேட்டாலும் நான் அதைக் கொடுக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார். இவ்வார்த்தை ஹிர்கலுக்கு எட்டியபோது அவருடன் இருந்த அவரது சகோதரர் ‘யன்னாக்’ என்பவன் “உமது அடிமை உமக்குக் கப்பம் கட்டாமல் உமது மார்க்கத்தை விட்டு விட்டு வேறொருவரின் புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு நீ விட்டு விடுகிறாயா?” என்று கேட்டான். அதற்கு ஹிர்கல் “ஒருவர் ஒரு மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும்போது அவரை நான் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது ஆட்சியின் மீது எனக்குப் பிரியமில்லையெனில் அவர் செய்தது போன்றுதான் நானும் செய்திருப்பேன்” என்றார்.

அப்து: அம்ரே! நீர் என்ன சொல்கிறாய் என்பதை நன்கு யோசித்துக் கொள்!

அம்ர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் உண்மைதான் சொல்கிறேன்.

அப்து: அவர் எதை செய்யும்படி ஏவுகிறார்? எதை செய்வதிலிருந்து தடுக்கிறார்?

அம்ர்: அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். (பெற்றோருக்கு) உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்துமீறுவது, விபசாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்.

அப்து: ஆஹா! அவர் அழைக்கும் விஷயம் எவ்வளவு நல்லதாக இருக்கிறது. எனது சகோதரர் இவர் விஷயத்தில் எனது பேச்சை ஏற்றுக் கொண்டால் நாங்கள் இருவரும் நேரடியாக முஹம்மதிடம் வந்து அவரை நம்பிக்கை கொண்டு அவரை உண்மைப்படுத்துவோம். ஆனால், எனது சகோதரர் தனது பதவி மீது ஆசை கொண்டவர். அதை அவர் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட்டு அவருக்கு (கட்டுப்பட்டு) வாலாக இருப்பதை விரும்ப மாட்டார்.

அம்ர்: நிச்சயமாக உமது சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்ப கொடுத்து விடுவார்கள்.

அப்து: இது மிக அழகிய பண்பாடாயிற்றே. தர்மம் என்றால் என்ன?

அம்ரு: நபியவர்கள் பொருட்களில் இன்னின்னவற்றில் ஏழைவரி கொடுக்க வேண்டுமென கடமையாக்கி இருக்கிறார்கள். அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகங்களிலும்.