பக்கம் - 408 -
கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை

போருக்கு முந்திய இரவு கைபருக்கு மிக அருகாமையிலேயே முஸ்லிம்கள் இரவைக் கழித்தார்கள். எனினும், யூதர்களால் முஸ்லிம்களின் வருகையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாக, நபியவர்கள் படையை அழைத்துச் செல்வது இரவு நேரமாக இருந்தால் காலை வரை காத்திருந்து அதிகாலையில் அக்கூட்டத்தினரைத் தாக்குவார்கள். அன்றிரவு ஸுப்ஹு தொழுகையை அதன் நேரம் வந்தவுடன் நல்ல இருட்டாக இருக்கும் போதே நிறைவேற்றிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள். கைபர்வாசிகள் விவசாயச் சாதனங்களை எடுத்துக் கொண்டு தங்களின் வயல்களுக்குப் புறப்பட்டனர். இஸ்லாமியப் படைகள் வருவது அவர்களுக்குத் தெரியாது. கொஞ்ச தூரம் வந்தவுடன் இஸ்லாமியப் படையை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். “ஆ! முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் அவரது படையும் வந்துவிட்டது” என்று கூறிக்கொண்டே ஊருக்குள் ஓடினர்.

நபியவர்கள் “அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகி விட்டது. அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகிவிட்டது. நாம் ஒரு கூட்டத்தினரின் ஊருக்குச் சென்றால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அக்கூட்டத்தினரின் அந்தப் பொழுது மிகக் கெட்டதாகவே அமையும்” என்று கூறினார்கள்.

கைபரின் கோட்டைகள்

கைபர் இரண்டு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதியில் ஐந்து கோட்டைகள் இருந்தன. மற்றொரு பகுதியில் மூன்று கோட்டைகள் இருந்தன. முதல் ஐந்து கோட்டைகளாவன. 1) நா”, 2) ஸஅப் இப்னு முஆது, 3) ஜுபைர், 4) உபை, 5) நிஸார். இந்த ஐந்தில் முதல் மூன்று கோட்டைகள் ‘நிதா’ என்ற இடத்தில் இருக்கின்றன. மற்ற இரண்டு கோட்டைகள் ‘ஷக்’ என்ற இடத்தில் இருக்கின்றன. கைபரின் மற்றொரு பகுதிக்கு ‘கதீபா’ என்று கூறப்படும். அதில் மற்ற மூன்று கோட்டைகளும் இருந்தன. அவை: 1) கமூஸ், 2) வத்தீஹ், 3) சுலாளிம். மேலும் கைபரில் இவையல்லாத பல கோட்டைகளும் இருந்தன. ஆனால், அவைகள் மிகச் சிறியவையே. மேற்கூறப்பட்ட எட்டு கோட்டைகளைப் போன்று அவை மிக பலம் வாய்ந்ததுமில்லை உறுதிமிக்கதுமில்லை.

கைபரின் இரண்டு பகுதிகளில் முந்திய பகுதியில்தான் மிகக் கடுமையான போர் நடந்தது. மூன்று கோட்டைகளைக் கொண்ட இரண்டாவது பகுதியில் போர் வீரர்கள் அதிகமாக இருந்தும் சண்டையின்றியே அவை முஸ்லிம்கள் வசம் வந்தன.

இஸ்லாமியப் படை முகாமிடுதல்

நபி (ஸல்) அவர்கள் படைக்கு முன் சென்று அப்படை முகாமிடுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்தார்கள். ஆனால் ‘ஹுபாப் இப்னு அல்முன்திர்’ (ரழி) என்ற தோழர், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இடம் அல்லாஹ் உங்களைத் தங்க வைத்த இடமா? அல்லது உங்கள் யோசனைக்கிணங்க தங்கியுள்ளீர்களா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “இல்லை! இது எனது யோசனையே” என்றார்கள்.