பக்கம் - 421 -


தாதுர் ரிகா

இஸ்லாமிற்கு எதிரான மூன்று மாபெரும் ராணுவங்களில் பலம் வாய்ந்த இரண்டு ராணுவங்களை முற்றிலும் முறியடித்ததற்குப் பின் மூன்றாவது எதிரியின் பக்கம் தங்களது கவனத்தை முழுமையாகத் திருப்பினார்கள். நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகளே அந்த மூன்றாவது எதிரிகள். அந்த அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நகரத்திலோ வசிக்கவில்லை. இவர்களது இல்லங்கள் பெரும் கோட்டைகளோ அரண்களோ இல்லை. மாறாக, முகவரியின்றி, பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ, முந்திய இரு எதிரிகளை அடக்கியதைவிட சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும் படி தாக்குதல்கள் நடத்துவது அவசியமாயிற்று. அதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு “தாதுர் ரிகா” என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் நான்காம் ஆண்டு நடந்தது என்று கூறுகின்றனர். ஆனால், இப்போரில் அபூ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே, ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும்.

இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது: கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். மதீனாவில் அபூதர் அல்லது உஸ்மானைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச் சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள ‘நக்ல்’ என்ற இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி, ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக் கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. எனினும், நபி (ஸல்) அன்றைய பொழுது ‘ஸலாத்துல் கவ்ஃப்“” முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ வைத்தார்கள்.

ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: (படை இரண்டாக பிரிக்கப்பட்டது) தொழுகைக்கு இகாமத் சொல்லப்படவே நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரிவினருக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். இரண்டு ரக்அத்துகளை முடித்துக் கொண்டு அப்பிரிவினர் பாதுகாப்பிற்குச் சென்றுவிட, மற்றொரு பிரிவினர் பிந்திய இரண்டு ரக்அத்தில் நபியுடன் சேர்ந்து தொழுதனர். ஆக, நபி (ஸல்) நான்கு ரக்அத்தும், மற்ற இரண்டு பிரிவினரும் இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர் (ஸஹீஹுல் புகாரி)