பக்கம் - 424 -
இப்படை இரவு நேரத்தில் சென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். விழித்துக் கொண்ட எதிரிகள் பெரும் படையை திரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கப் பின்தொடர்ந்தனர். மிகச் சமீபத்தில் எதிரிகள் வந்துவிட்ட பொழுது கடுமையான மழை ஒன்றை அல்லாஹ் இறக்கினான். சிறிது நேரத்தில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்கள் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தனர்.

2)ஹிஸ்மா படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ஜுமாதல் ஆகிராவில் இப்படை அனுப்பப்பட்டது. “அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்” என்ற தலைப்பின் கீழ் இப்படையெடுப்பின் விவரங்கள் கூறப்பட்டு விட்டன.

3) உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ஸஅபான் மாதத்தில் முப்பது நபர்களுடன் உமர் (ரழி) அவர்களை ‘துர்பா’ என்ற இடத்துக்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை இரவில் பயணிப்பதும் பகலில் மறைந்திருப்பதுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. துர்பாவில் வசித்து வந்த ஹவாஸின் கிளையினருக்கு இச்செய்தி எட்டியவுடன் இடங்களைக் காலி செய்து தப்பித்து ஓடிவிட்டனர். உமர் (ரழி) தங்கள் படையுடன் அங்கு சென்று பார்த்த பொழுது யாரும் இல்லாததால் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள்.

4) பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு

ஹஜ் 7, ஷஅபான் மாதத்தில் பஷீர் (ரழி) அவர்களை முப்பது வீரர்களுடன் நபி (ஸல்) ‘ஃபதக்’ மாநிலத்தின் ஓர் எல்லையில் வசிக்கும் முர்ரா கிளையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை அங்கு சென்று தாக்குதல் நடத்தி, அவர்களின் கால்நடைகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்பினர். இரவு நேரத்தில் எதிரிகள் படையாக வந்து இவர்களுடன் போர் புரிந்தனர். பஷீர் (ரழி) அவர்களும் அவருடைய தோழர்களும் எதிரிகளை அம்பால் எறிந்து தாக்கினர். இவர்களின் அம்புகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இறுதியாக நடந்த வாள் சண்டையில் பஷீரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். பஷீர் (ரழி) தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் அங்கிருந்து ஃபதக்குக்குச் சென்றார். காயங்கள் குணமாகும் வரை யூதர்களிடம் தங்கியிருந்து விட்டு மதீனா வந்து சேர்ந்தார்.

5) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ரமழான் மாதத்தில் 130 வீரர்களுடன் ‘மைஃபஆ’ என்ற இடத்திலுள்ள உவால், அப்து இப்னு ஸஅலபா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த காலிப் இப்னு அப்துல்லாஹ்வுடன் ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். இப்படையெடுப்பின் போதுதான் ‘நஹ்க் இப்னு மிர்தாஸ்’ என்பவர் கலிமாவை மொழிந்தும் உஸாமா இப்னு ஸைது (ரழி) என்ற நபித்தோழரால் கொல்லப்பட்டு விட்டார். படை மதீனா வந்தடைந்ததும் அச்செய்தி நபியவர்களுக்குத் தெரிய வரவே “லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறிய பின்னரா நீ அவரைக் கொலை செய்தாய்?” எனக் கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு, “தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அதைக் கூறினார்” என்று உஸாமா (ரழி) பதிலளிக்க, “அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா?” என்று நபி (ஸல்) வன்மையாகக் கண்டித்தார்கள்.