பக்கம் - 426 -

அறிஞர் ஹாகிம் (ரஹ்) கூறுகிறார்: துல்கஅதா பிறை உதயமானதும், “சென்ற ஆண்டு (ஹுதைபிய்யாவில்) தவறிப்போன உம்ராவை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இடைப்பட்ட காலங்களில் (ஷஹீத்) வீரமரணம் அடைந்தவர்களைத் தவிர ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட (ஒருவர்கூட பின்தங்கி விடாமல்) அனைவரும் புறப்பட வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபியவர்களின் கட்டளைக்கிணங்க ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் உம்ராவை நிறைவேற்ற புறப்பட்டனர். இவர்களுடன் உம்ராவில் ஆர்வம் கொண்ட மற்றும் பலரும் புறப்பட்டனர். இவர்களில் பெண்கள், சிறுவர்கள் தவிர ஆண்கள் மட்டும் மொத்தம் இரண்டாயிரம் பேர் இருந்தனர்.” (ஃபத்ஹுல் பாரி)

மதீனாவில் உவைஃப் இப்னு அழ்பத் அத்தய்லி அல்லது அபூ ரூஹும் அல்கிஃபாயை பிரதிநிதியாக நியமித்துவிட்டு குர்பானிக்காக அறுபது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு நபி (ஸல்) புறப்பட்டார்கள். இந்த ஒட்டகங்களுக்குப் பொறுப்பாளராக நாஜியா இப்னு ஜுன்துப் அஸ்லமியை நியமித்தார்கள். துல்ஹுலைபா வந்தவுடன் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொண்டு தல்பியா கூறினார்கள். முஸ்லிம்களும் நபியவர்களைப் பின்பற்றி தல்பியா கூறலானார்கள். குறைஷிகள் மோசடி செய்யலாம் அல்லது ஒப்பந்தத்தை மீறலாம் என்ற அச்சத்தில் போர் வீரர்கள், ஆயுதங்கள் சகிதம் எதற்கும் ஆயத்தமாகவே நபி (ஸல்) புறப்பட்டார்கள். ‘யஃஜுஜ்’ என்ற இடத்தை அடைந்தவுடன் தங்களிடமிருந்த ஈட்டிகள், அம்புகள், கேடயங்கள் அனைத்தையும் அங்கு வைத்துவிட்டு, அவற்றிற்கு அவ்ஸ் இப்னு கவ்லி அன்சாரியை 200 வீரர்களுடன் அதன் பாதுகாப்புக்கு நியமித்தார்கள். ஒரு பயணி வைத்திருக்கும் ஆயுதத்தை மட்டும் அதாவது, உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

நபி (ஸல்) தனது கஸ்வா ஒட்டகத்தில் வாகனிக்க, முஸ்லிம்கள் நபியவர்களை சுற்றி படை சூழ வாளேந்தியவர்களாக தல்பியாவையும் முழங்கிக் கொண்டு மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் கஅபாவின் வடப் பகுதியில் இருந்த ‘குஐகிஆன்’ என்ற மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கை பார்க்கலானார்கள். மதீனாவின் காய்ச்சலால் பாதிப்படைந்த ஒரு குழுவினர் இப்போது நம்மிடம் வர இருக்கின்றனர் என்று கிண்டலாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்ளுங்கள் தவாஃபுடைய முதல் மூன்று சுற்றுகளில் மட்டும் குதித்து ஓடுங்கள் ஆனால், இரண்டு ருகூன்களுக்கு மத்தியில் சாதாரணமாக நடந்துச் சுற்றுங்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகள் முழுவதும் சாதாரணமாக நடந்தே சுற்றுங்கள்!” எனக் கட்டளையிட்டார்கள். தங்களது தோழர்கள் மீதுள்ள கருணையினால் ஏழு சுற்றுகளிலும் தோள்களை உயர்த்தி ஓட வேண்டுமென்று நபி (ஸல்) கூறவில்லை. இணைவைப்பாளர்களுக்குத் தங்களது பலத்தைக் காட்டுவதற்காகவே நபி (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)