பக்கம் - 428 -
நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது ஹம்ஜா (ரழி) அவர்களின் மகளார், “எனது சிறிய தந்தையே! எனது சிறிய தந்தையே!” என கூவிக்கொண்டு நபியவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். அவரை அலீ (ரழி) தூக்கி அணைத்துக் கொண்டார்கள். அவரை வளர்ப்பதற்காக அலீ, ஜஅஃபர், ஸைது (ரழி) மூவரும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டனர். ஆனால், நபியவர்கள் அச்சிறுமியை வளர்க்கும் உரிமையை ஜஅஃபருக்குக் கொடுத்தார்கள். காரணம், இச்சிறுமியின் தாயின் சகோதரியைத்தான் ஜஅஃபர் (ரழி) மணம் முடித்திருந்தார்கள்.

இப்பயணத்தில் நபியவர்கள் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் அல்ஆமியாவைத் திருமணம் செய்தார்கள். நபியவர்கள் மக்கா நுழையும் முன்பே இது விஷயமாக ஜஅஃபர் இப்னு அபூதாலிபை மைமூனாவிடம் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரழி) இந்த உரிமையைத் தனது சகோதரியின் (உம்முல் ஃபழ்லின்) கணவர் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அப்பாஸ் (ரழி) நபியவர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுக்கு மைமூனாவை மணம் முடித்து வைத்தார்கள். நபியவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து வெளியேறியபோது மைமூனாவை அழைத்து வருவதற்காக அபூராஃபியை விட்டு வந்தார்கள். நபி (ஸல்) ஸஃபில் தங்கியிருந்தபோது அபூராபிஃ, மைமூனாவை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். (ஜாதுல் மஆது)

இந்த உம்ராவிற்கு ‘உம்ரத்துல் கழா’ என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.

மார்க்க அறிஞர்கள் இரண்டாவது காரணமே மிக ஏற்றமானது எனக் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவிற்கு வரலாற்றில் நான்கு பெயர்கள் கூறப்படுகின்றன. 1) உம்ரத்துல் கழா, 2) உம்ரத்துல் கழிய்யா, 3) உம்ரத்துல் கிஸாஸ், 4) உம்ரத்துல் சுல்ஹ். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியதற்குப் பின் நபி (ஸல்) பல சிறிய படைகளை அனுப்பி வைத்தார்கள். அதன் விவரங்கள் வருமாறு:

1) இப்னு அபுல் அவ்ஜா படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, துல்ஹஜ் மாதத்தில் 50 வீரர்களுடன் இவரை இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக சுலைம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் சுலைமனரிடம் சென்று, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தபோது “உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை” என்று அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், இரு சாராருக்குமிடையில் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் அபூஅவ்ஜா (ரழி) காயமடைந்தார். இரண்டு எதிரிகள் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.

2) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு: ‘ஃபதக்’ என்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட பஷீர் இப்னு ஸஅது அன்சாரியின் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லவா, அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக 200 வீரர்களை காலிபு இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் ஹிஜ்ரி 8, ஸஃபர் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அங்கு சென்று ஏராளமானவர்களை கொன்றுவிட்டு அதிகமான கால்நடைகளை ஓட்டி வந்தனர்.